Adhav Arjuna's criticized dmk and congress alliance
சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்தார்.
இருப்பினும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்ற காங்கிரஸ் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வெளிப்படையாக எழுப்பி வருகின்றனர். இதனால் கூட்டணிக்குள் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரப் பணிகள் உள்ளிட்டவைகளை பேசுவதற்கு திமுகவில் தற்போது வரை குழு அமைக்காததால் காங்கிரஸ் அதிருப்தி காட்டி வருகிறது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் உறவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்துள்ளார். சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் நாளை (13-02-26) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த இடத்தை இன்று பார்வையிட்ட ஆதவ் அர்ஜுனா, அதற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “234 தொகுதியிலும் தனியாக நின்று நாங்கள் வெற்றி பெறுவோம். 2014இல் ஜெயலலிதா சொன்ன மாதிரி முடிந்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் நின்று ஜெயித்து காட்டுங்கள். திமுகவுக்கு ஆதரவு பலம் இழந்துவிட்டது. 22 சதவீதம் மேல் அவர்களுக்கு வாக்கு வங்கி கிடையாது. அதனால் தான் காங்கிரஸ் தலைவர்கள் 50 வருடம் கழித்து ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள்.
திமுகவில் வலு சுத்தமாக இல்லை. ராஜ கண்ணப்பனில் இருந்து எல்லோரும் காங்கிரஸுக்கு எதிராக பேச ஆரம்பித்துவிட்டார்கள். அடிமட்டத்தில் உள்ள தொண்டர்கள் இந்த கூட்டணிக்கு எதிராக திரும்பிவிட்டார்கள். இது ஒரு பொருந்தாத கூட்டணி. அறிவாலயத்திற்கு வெளியே காங்கிரஸ் கட்சியினரை திமுகவினர் நிற்க வைத்திருக்கிறார்கள். செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர் ஆகியோருடைய பேச்சுகளில் முரண்பாடுகள் இருக்கிறது. இதில் இருந்தே திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இணக்கம் இல்லை என்று தெளிவாக தெரிகிறது” என்று கூறினார்.
Follow Us