பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர். இருப்பினும், தூய்மை பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது என்பதை வலியுறித்தி தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, 4 பெண் தூய்மை பணியாளர்கள், கடந்த 17ஆம் தேதி முதல் 10 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4 பெண்களை சந்தித்துப் பேசி அவர்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா, “மேடையில் மட்டும் சமூக நீதிக்கான அரசு என்று சொல்லிட்டு இருக்கக்கூடிய அரசு, இங்கு இருக்கக்கூடிய ஆதி திராவிட மக்களை 10 நாள் சாப்பிட விடாமல் உட்கார வைத்து எந்த வேலையும் கொடுக்காமல் ஒட்டுமொத்த தூய்மை பணியாளர்களையும் நடு ரோட்டில் நிற்க வைத்து பெரிய அராஜகத்தை நிகழ்த்திட்டு இருக்கிறார்கள்.
சட்டப்படி இந்த ஆட்சி நடக்கவில்லை. இந்த விஷயத்தில், நாங்களும் கடுமையாக சட்டபோராட்டம் கொண்டு வருவோம். எங்கள் தலைவர் விஜய், இதை கேள்விபட்டு நான்கு ஐந்து நாட்களாகவே வருத்தப்பட்டு உடனடியாக பார்க்க போக வேண்டும் என்று சொன்னார். கூடிய விரைவில் விஜய்யோடு ஆலோசனை நடத்தி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை தவெக முன்னெடுக்கும். அதாவது ஊழல் பண்ணலாம், ஆனால் மக்களை சாவடித்து ஊழல் செய்யக் கூடாது என்பது தான் எங்களுடைய கோரிக்கை. அரசியல் அமைப்பினுடைய உரிமை இங்கு மறுக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களுடைய உரிமை மீறப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கங்களும், விடுதலை சிறுத்தை கட்சியும் இந்த மக்களுக்காக வந்து நிக்க வேண்டும். இந்த ஒரு விஷயத்திலாவது அரசியலை தூக்கி போட்டு வாருங்கள்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/26/aad-2025-11-26-16-37-43.jpg)