Adhav Arjuna asks Why did the Karur police welcome us
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிப்பதற்கு எதிராக தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் சிபிஐ விசாரணை கூறியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு மதுரை கிளையில் உள்ள நிலையில் ஏன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார் எனக் கேள்வி எழுப்பி, தமிழக அரசிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (13-10-25) விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெறும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தவெக பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர், “ஒரு வலி மிகுந்த நாட்களில் நாங்கள் பயணம் செய்து வருகிறோம். அந்த அளவுக்கு ஒரு நெருக்கடியான காலக்கட்டம். தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒவ்வொரு மாவட்டம் மிகப்பெரிய எழுச்சி உருவானது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையுடனும் மிகப்பெரிய அன்புடனும் விஜய்யுனுடைய பிரச்சாரத்திற்காக காத்திருந்தார்கள். அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை பெரிதாக ஆதரவு கொடுத்தது கிடையாது. அரியலூரில் சப்போர்ட் செய்தார்கள், பெரம்பலூரில் எஸ்பி எங்களுக்கு முன்னெச்சரிக்கையாக பல தகவல் கொடுத்தார். அதனால் தான் கடைசி நிமிடத்தில் அந்த பிரச்சாரத்தை ரத்து செய்தோம். விஜய் தாமதமாக வந்தார் என அபாண்டமான குற்றச்சாட்டை வைக்கிறார்கள். 3 மணி முதல் 10 மணி வரை என காவல்துறை என்ன நேரம் கொடுத்தார்களோ, அந்த நேரத்திற்கு சரியாகத் தான் சென்றோம்.
ஆனால். கரூர் மாவட்டத்தில் நாங்கள் நுழையும் போதே கரூர் காவல்துறை எங்களை வரவேற்றார்கள். இது எந்த மாவட்டத்திலும் நடக்கவில்லை. அவர்கள் தான் திட்டமிட்ட இடத்தில் கொண்டு போய் பேசுங்கள் என்றார்கள். விஜய்யும் எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். அப்படி தவறுகள் இருந்தால் ஏன் கரூர் காவல்துறை மாவட்டத்துடைய எல்லையிலேயெ வரவேற்க வேண்டும். இந்த இடத்தை எந்தளவுக்கு கட்டாயப்படுத்தி தவெகவுக்கு கொடுத்தார்கள் என்ற ஆதாரத்தை நாங்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் கொடுப்போம். ஏனென்றால், தமிழக அரசு மீதோ தமிழக அரசின் விசாரணை மீதோ எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த சம்பவம் நடந்த பிறகு எல்லோரும் ஓடிவிட்டார்கள் என்கிறார்கள். ஆனால், நாங்கள் ஓடவில்லை, எங்களுடைய மொபைல் நெட்வொர்க்கை சோதித்துக் கொள்ளலாம். கரூர் எல்லையில் நான், பொதுச் செயலாளர், நிர்மல் குமார் ஆகியோர் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நீங்கள் வந்தால் கலவரம் வரும் என்று வர வேண்டாம் என்று காவல்துறை கூறினார்கள். அதையும் நாங்கள் தாக்கல் செய்வோம். தவெக வரக் கூடாது சொல்லிவிட்டு, ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்களையும், ஒட்டுமொத்த கட்சியையும் தடியடி நடத்தி மிகப்பெரிய தீவிரவாதிகள் மாதிரி யார் அடித்தார்கள் என்பதையும் தாக்கல் செய்வோம்” என்று கூறினார்.