தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச்சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஜய் பிரச்சாரம் செய்த இடத்திற்கு எதன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறித்து சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று (28.09.2025) கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்த நிகழ்வு சம்பந்தமாக உடனடியாக என்னைக் கிளம்பச் சொல்லி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்ட பின் நான் நேற்று இரவு உடனே கிளம்பி கரூருக்கு வந்தேன். இங்கு வந்த பல இடங்களில் பத்திரிகை நிருபர்கள் சார்பாகப் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் முதலாவதாக எதற்காக இந்த பகுதியை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் இதற்கு முன்னால் கொடுக்கப்பட்ட பதில், ஏன் நீங்கள் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று கேட்டார்கள். 23.9.2025 அன்று முதலாவதாக ஒரு மனு கொடுக்கிறார்கள். அந்த மனுவில் அவர்கள் கேட்டது லைட்ஹவுஸ் ரவுண்டானா என்ற பகுதியைக் கேட்கிறார்கள். அந்த லைட் ஹவுஸ் ரவுண்ட் என்பது ஒரு ஹை ரிஸ்க் பிளேஸ்.
அந்த ரவுண்டானாவின் ஒரு பக்கம் பெரிய பெட்ரோல் பங்க் இருக்கிறது. அடுத்த பக்கம் (ரைட் சைடு) அமராவதி ஆறு இருக்கிறது. பெரிய பிரிட்ஜ் போகிறது. அதனால் அந்த இடத்தில் இந்த மாதிரி கூட்டம் நிறைந்த நிகழ்வை நடத்துவது மிகக் கஷ்டமான ஒரு சூழ்நிலை. அதைப் பார்த்த உடனே காவல் நிலையத்தில் அதனை நிராகரித்துவிட்டனர். அடுத்த நாள் அவர்கள் கேட்டது ரவுண்டானாவில் கொடுங்கள் அல்லது உழவர் சந்தை கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். உழவர் சந்தை மைதானம் அமைந்துள்ள இடமும் கொஞ்சம் குறுகலான இடம்.
அதிலும் இந்த மாதிரி கூட்டம் நிறைந்த நிகழ்வை நடத்துவது மிகவும் கடினம். அப்போது தான் வேளாதபுரத்தில் சுமார் 12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் பேர் நடத்தியிருக்கிறார்கள் . அது ஒரு அங்கீகாரம் பெற்ற இடம். அந்த இடத்தில் நீங்கள் நடத்திக்கொள்ளலாம் என்று காவல்துறையினர் ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள். அதனை முதலில் அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர்களே அப்ரூவ் செய்து அவர்களே 26ஆம் தேதி மனு கொடுத்து அதற்கு உத்தரவு பெற்றுக் கொண்டனர். இதை பொறுத்தவரைக்கும் தமிழக வெற்றிக் கழகத்தினரிடம் பேசி அவர்களிடம் கூறிய பிறகு தான் அனுமதி கொடுத்தோம்” எனத் தெரிவித்தார்.