Advertisment

‘பிச்சாவரத்தை காலநிலை மீள்திறன் கிராமமாக மீட்க நடவடிக்கை’ - கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ

1

சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தை காலநிலை மீள்திறன் கிராமமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக பல்வேறு மாவட்டங்களில் 11 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சி அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தப் பேரூராட்சிக்குட்பட்ட பிச்சாவரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, வனத்துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ராகுல்நாத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ செய்தியாளர்களிடம் பேசுகையில், "சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து மீள, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் மூலம் காலநிலை மீள்திறன் மிக்க கிராமங்களாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.

இதில், கிள்ளை பேரூராட்சியை அடையாளம் கண்டு, பிச்சாவரம் பகுதியில் காலநிலை மீள்திறன் கிராம அலுவலகம் அமைத்தல், பக்கிங்காம் கால்வாய் தூர்வார்த்தல், சோலார் மின் விளக்குகள் அமைத்தல், மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய பசுமைப் பள்ளி வளாகம் ஏற்படுத்துதல், சதுப்புநிலக் காடுகளை மேம்படுத்தும் வகையில் அலையாத்தி செடிகள் நடுதல் ஆகியவை அடங்கும்.

Advertisment

அப்பகுதியில் உள்ள அரசுக் கட்டிடங்கள் மற்றும் தெருக்களில் சோலார் மின் விளக்குகள் ஏற்படுத்துதல், அப்பகுதி மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் சோலார் மீன் உலர்த்திகள் அமைத்தல், சதுப்புநிலங்களைப் பாதுகாத்து மேம்படுத்தும் வகையில் வனத்துறை அலுவலர்களை உறுப்பினர் செயலாளராகக் கொண்ட கிராம சதுப்புநில மேம்பாட்டுக் குழு அமைத்தல், பிச்சாவரம் படகு இல்லத்தில் மின் படகுகள் மூலம் பசுமை சுற்றுலாவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முன்னெடுப்புகள், காலநிலை மீள்திறன் மிக்க கிராமத் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முதன்மைத் தலைமை வன அலுவலர் மற்றும் தலைமை வனவிலங்குக் காவலர் ரகேஷ்குமார் டோக்ரா, மாவட்ட வன அலுவலர் குருசாமி, கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கிள்ளை ரவிந்திரன், காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் சௌமியா சாமிநாதன், ரமேஷ் ராமச்சந்திரன், எரிக் சோலஹிம், நிர்மலா ராஜா, சுந்தர்ராஜன், கலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Pichavaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe