தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. 

Advertisment

இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களைப் பலப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. அதன் காரணமாகக் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் கட்சி மாறி, புதிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து நடிகை கஸ்தூரியும், திருநங்கை நமிதா மாரிமுத்துவும் பா.ஜ.க.வில் இனைந்துள்ளனர். 

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகை கஸ்தூரியும், நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெச்சி சிவா முன்னிலையில், பாஜகவில் இணைந்தனர். சமூக செயல்பாட்டாளரான கஸ்தூரி, நமீதா மாரிமுத்துவும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் தமிழக பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரவித்துள்ளார்.