தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அடுத்த மாதம் 18ம் தேதி சனிக்கிழமை வேலூர் மாவட்டத்திற்கு மக்களை சந்திப்பதற்காக வருகை தர உள்ளதால், பாதுகாப்பு கேட்டு வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குறிப்பாக வேலூர் மாநகருக்கு உட்பட்ட அண்ணா கலையரங்கம், அணைக்கட்டு பேருந்து நிலையம், குடியாத்தம் பேருந்து நிலையம், கே.வி.குப்பம் பேருந்து நிலையம் மற்றும் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்திக்க உள்ளதால் தேவையான பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வேல்முருகன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடத்தில் மனு அளித்துள்ளார்.
பின்னர் அவர்கள் அளித்த பேட்டியில், அடுத்த மாதம் (அக்டோபர் 18) ம் தேதி தவெக தலைவர் விஜய் வருகை தொடர்பாக அனுமதி கோரி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனு அளித்தோம். ஐந்து இடங்களை குறிப்பிட்டுள்ளோம் அதில் ஏதாவது ஒரு இடத்திற்கு அனுமதி கேட்டுள்ளோம். காவல்துறையும் அனுமதி கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். தற்போதைக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
கடந்த காலத்தில் நடந்த சிரமங்களையும், இன்னல்களையும் முடிந்த அளவிற்கு தவிர்க்கச் சொல்லியும் அன்பை மட்டுமே காட்டச் சொல்லியும் அறிவுறுத்தியுள்ளோம். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் மக்கள் சந்திப்பை வேலூரில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வேல்முருகன் பேட்டி அளித்தார்.