Actor Karthi honours farmers with awards for Farmer Awards 2026
விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் கெளரவித்து அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா, தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகரும், உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகர் ரவி மோகன், நடிகை ரேவதி, நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், OFM அனந்து ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். இவர்களுடன் வேளாண் செயற்பாட்டாளர்கள், வேளாண் வல்லுநர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/16/kar2-2026-01-16-15-08-17.jpg)
இந்த நிகழ்ச்சியில், கோவில்பட்டியைச் சேர்ந்த பழனியம்மாளுக்கு சிறந்த விவசாயி விருதும், மதுரையைச் சேர்ந்த பாமயனுக்கு வேளாண் பங்களிப்பு விருதும், வேலூர் மக்கள் நலச்சந்தைக்கு சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருதும், திருப்பூர் ‘வேர்கள்’ அமைப்புக்கு நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருதும், குன்னூரைச் சேர்ந்த ‘க்ளீன் குன்னூர்’ உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.
விழாவில் உரையாற்றிய நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி, “நமக்காக இரவு பகலாக உழைத்து உணவை அளிக்கும் விவசாயிகளை இந்தச் சமூகம் பெரிதாகக் கவனிப்பதில்லை. அவர்களை முறையாக அங்கீகரிப்பதில்லை. அவர்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், அவர்களுடைய உழைப்பு மட்டும் ஒருபோதும் நின்றுவிடவில்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களை கொண்டாட வேண்டும். இந்த சமூகத்திற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து இந்த ‘உழவர் விருதுகளை’ வழங்கி வருகிறோம். நம் அன்றாட வாழ்வில் விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும். அந்த நிலை உருவாக இதுபோன்ற விழாக்களும், கலந்துரையாடல்களும் அவசியம். அதற்காகவே இதை நான் தொடர்ந்து செய்வேன்,” என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/16/kar3-2026-01-16-15-09-34.jpg)
இந்த விழாவில், வேளாண் தொழிலாளர்களின் பிரச்சினைகள், குப்பை மேலாண்மையின் அவசியம், விவசாயத்தில் பெண்களின் பங்கு, சிறு குறு விவசாயிகளுக்காக உள்ளூர் சந்தைகளின் தேவை, நீர் நிலைகள் மீட்டெடுத்தலின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.
மொத்தத்தில், விவசாயத்தைப் பற்றியும், அதில் உள்ள சவால்கள், அவற்றுக்கான அவசியமான முன்னெடுப்புகள் என்ன என்பதையும் அனைவருக்கும் முழுமையாக புரிய வைக்கும் நிகழ்ச்சியாக இந்த ‘உழவர் விருதுகள் 2026’ விழா அமைந்தது.
Follow Us