Action under the Act against those who damaged graves.
ஈரோடு மாவட்டம், கருமாண்டி செல்லிப்பாளையம் கிராமத்தில் உள்ள வண்டிப்பாதை என வரையறுக்கப்பட்ட நிலத்தைத் தகன மயானமாக மாற்றவும், அந்த மயானத்தில் உடலை அடக்கம் செய்வதை உறுதி செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டன. நீண்ட காலமாக மயானமாகப் பயன்படுத்தி வரும் இடத்தை, சிலர் ஆக்கிரமிக்க முயன்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள், ‘செல்லிப்பாளையம் கிராமத்தில் உள்ள வண்டிப்பாதை என வரையறுக்கப்பட்டுள்ள நிலத்தைக் கடந்த 70 ஆண்டுகளாக அங்கு வாழும் பட்டியலின மக்கள் மயானமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து, அந்த நிலத்தைச் சிலர் வண்டிப்பாதை நிலம் எனக் கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் காரணமாக அங்குள்ள கல்லறைகளை இயந்திரங்கள் மூலமாக அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தினை சமன் செய்துள்ளனர். இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்கள், பொது மயானத்திற்குச் செல்ல அனுமதி மறுப்பது கடுங்குற்றம். இது தீண்டாமைக்குச் சமம். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
பொதுவாக உள்ள மயானத்தைப் பயன்படுத்த அனுமதி மறுப்பது மற்றும் அங்குள்ள கல்லறைகளைச் சேதப்படுத்துவது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம். இருப்பினும், இந்த சம்பவத்தின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் தவறிவிட்டார். இங்கு ஒவ்வொருவருக்கும் வாழும் போது கண்ணியத்துடன் வாழ உரிமை உள்ளது போல, இறந்தவர்களுக்குக் கண்ணியத்துடன் இறுதிச் சடங்கு செய்யவும் உரிமை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள மயானம் எந்தவித ஆக்கிரமிப்பு அல்லது குப்பை கொட்டும் இடமாக மாறாமல் இருக்க கருமாண்டி செல்லிப்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட இடத்தை வண்டி பாதை என்ற வகைப்பாட்டில் இருந்து நீக்கி, அப்பகுதியை மயானம் என மாற்ற வேண்டும். மயானத்தில் இருந்த கல்லறைகளைச் சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
Follow Us