பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சித் தலைவர் பதவி மற்றும் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர, நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். மறுபுறம், அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த 9ஆம் தேதி (09.08.2025) நடைபெற்றது. இதில் பா.ம.க.வின் தலைவராக அன்புமணியே நீடிப்பார் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், விழுப்புரம் பட்டானூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (17.08.2025) கூடியது. அதில் பா.ம.க. விதிகளில் திருத்தம் உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, ‘சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்படுகிறது. ராமதாஸைத் தவிர வேறு யாரும் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. அனைத்துத் தேர்தல்களிலும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்படுகிறது. பொதுக்குழுவுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் எனத் திருத்தம் செய்யப்படுகிறது’ உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே, பொதுக்குழுவில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது. பாமகவில் பிளவை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி செயல்பட்டதாக, 16 குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சிறப்புப் பொதுக்குழுவில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதற்கு அன்புமணி பதிலளிக்க வேண்டும் என்று நேற்று (18.08.2025) நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அன்புமணி தரப்பில் இருந்து இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகைய சூழலில் தான் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பதற்காக தைலாபுரம் தோட்டத்தில் இன்று (19.08.2025) ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டமானது நடைபெற உள்ளது. அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டு அந்த முடிவு குறித்து ராமதாஸிடம் பரிந்துரை செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.