Advertisment

பாலியல் குற்றம் செய்தவருக்கு பாஜக தலைவர் ஆதரவு? போலீஸை தாக்கிய கிராம மக்கள்!

Untitled-1

உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் மாவட்டம் அஹ்மத்கர் கிராமத்தைச் சேர்ந்தவர், 45 வயதான அஃப்ஸல் முகமது. இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்திக்கொண்ட அஃப்ஸல் முகமது, அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பல முறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இருப்பினும், திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த இளம்பெண் கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, அவரை அஃப்ஸல் முகமது மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆகஸ்ட் 28-ஆம் தேதி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இளம்பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, அஃப்ஸல் முகமது திடீரென தலைமறைவாகினார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்த நிலையில், அஹ்மத்கர் கிராமத்தில் போலீசார் மப்ட்டியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அஃப்ஸல் முகமது அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறைக் குழு ஒன்று அந்த வீட்டைச் சுற்றி வளைத்து, உள்ளே நுழைந்தது. பின்னர், அங்கிருந்த அஃப்ஸல் முகமதுவைக் கையும் களவுமாகப் பிடித்து, வெளியே அழைத்து வந்தனர். அப்போது, பாஜகவைச் சேர்ந்த கிராமத் தலைவரான ரவுஃப் கான், சில கிராமவாசிகளுடன் வந்து, காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அஃப்ஸல் முகமதுவைக் கைது செய்யவும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.

இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அஃப்ஸல் முகமது, இரண்டு காவலர்களைக் கீழே தள்ளிவிட்டு, வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தப்பிச் சென்றார். மேலும், காவல்துறையினர் பின்தொடர்ந்து சென்றபோது, கிராமவாசிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களைக் கொண்டு வழிகளை மறித்து, அஃப்ஸல் முகமது தப்பிப்பதற்கு உடந்தையாக இருந்தனர். மேலும், சில கிராமவாசிகள் காவல்துறையினரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், குற்றவாளிக்கு உடந்தையாக இருந்து தப்ப வைத்ததற்காக, கிராமத் தலைவர் ரவுஃப் கான் உட்பட 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அடையாளம் தெரியாத 15 கிராமவாசிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய புலந்த்சர் எஸ்.எஸ்.பி. தினேஷ் குமார், “குற்றம்சாட்டப்பட்ட அஃப்ஸலைத் தேடுவதற்கு பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு உரிய முறையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கைது செய்து அழைத்து வந்தபோது, சில கிராமவாசிகள் காவல்துறையினரைத் தடுத்து நிறுத்தி, தகராறு செய்வது வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்களைத் தேடி வருகிறோம். அஃப்ஸல் தப்பிக்க உதவியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

ஆனால், கிராமவாசிகள், “காவலர்கள் சிலர் மாறுவேடத்தில் இருந்தனர். அதனால், அவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களாக நினைத்துவிட்டனர். இந்தக் குழப்பத்தின் நடுவேதான் அஃப்ஸல் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம். ஆனால், அப்பாவி கிராமவாசிகள் துன்புறுத்தப்படக் கூடாது,” என்று கூறினர். ஆனால், காவல்துறை தரப்பில், காவலர்கள் உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பல கிராமவாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தப்பியோடிய அஃப்ஸல் முகமது மற்றும் அவர் தப்பிக்க உதவியவர்களையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது, அவர்களைத் தள்ளிவிட்டு அஃப்ஸல் முகமது தப்பிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

b.j.p police uttarpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe