சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகன் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின்  உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Advertisment

கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் துரைமுருகன். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாகக் கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி சாந்தகுமாரிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து இவர்கள் இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

அதன்படி இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. அதோடு இந்த வழக்கை மீண்டும் விசாரித்து 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கைச் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது கடந்த 2024ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணையை வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகன் எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இந்த வழக்கை வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்ற மறுத்ததை எதிர்த்து அமைச்சர் துரைமுருகன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் அமர்வில்  கடந்த 10.09.2025 அன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் துரைமுருகன் தரப்பில் இருந்து மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். அப்போது அவர் கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில் இந்த வழக்கைச் சென்னைக்கு மாற்றுவது குறித்து கேள்வி எழுப்பினார்.

Advertisment

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “இந்த மனு தொடர்பாகச் செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க வேண்டும். அதே சமயம் இந்த வழக்கில் நேரில் ஆஜராக துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்து இந்த வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில்  துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தீபாங்கர் தத்தா சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.