ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் மீது எதிரே வந்த கர்நாடகா எண் கொண்ட இன்னோவா சொகுசு கார் மோதிய விபத்தில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார், புதிய மேம்பாலத்தில் உயிரிழந்த மூன்று இளைஞர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, விபத்து சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மேம்பால விபத்தில் உயிரிழந்தவர்கள் காரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (20), அதேபோல் வேலூர் மாவட்டம் ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த சாஜன் (26), ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (19) என விசாரணையில் தெரியவந்தது. மேலும், விபத்துக்குள்ளான கார் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us