மதுரை மாவட்டம் சிட்டம்பட்டியைச் சேர்ந்த பிரசாத் (25), மனைவி சத்யா (20), மகன் தஷ்வந்த் (2) ஆகியோர் உறவினர் தங்கம்மாள் மரணத்தையடுத்து அனஞ்சியூரில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்று டூ-வீலரில் மதுரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சோனை ஈஸ்வரி (25) என்பவரும் பயணம் செய்தார்.

Advertisment

இந்நிலையில் அனஞ்சியூர் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில், ரவுடிகள் கண்காணிப்புப் பிரிவு (OCIU) இன்ஸ்பெக்டர் ஜெயராணி பயணம் செய்த அரசு போலீஸ் வாகனம் (டிரைவர் பாலமுருகன் இயக்கிய) டூ-வீலரை மோதியதில், வாகனம் சாலையோர சரிவில் கவிழ்ந்தது. இதில் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சத்யா, தஷ்வந்த், சோனை ஈஸ்வரி ஆகியோர் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் சத்யாவும் தஷ்வந்தும் வழியிலேயே உயிரிழந்தனர். சோனை ஈஸ்வரி கடுமையாகக் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார்.

Advertisment

இந்த விபத்துக்குக் காரணமான அரசு போலீஸ் வாகனம், 2018 ஆம் ஆண்டிலேயே இன்சூரன்ஸ் காலாவதி ஆகியிருந்தது எனத் தெரியவந்துள்ளது. இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரணம் பெறுவது சட்ட ரீதியாகச் சிக்கலாகும் எனக் கூறப்படுகிறது.

இன்சூரன்ஸ் இல்லாத அரசு வாகனங்களை இயக்குவது, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக விதிகளின்படி, 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசு வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. இருப்பினும், தமிழகத்தில் சுமார் 12,000 அரசு கார், ஜீப், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள், இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்கி வருவதாகத் தெரியவந்துள்ளது. அவற்றின் பயன்பாட்டுக் காலம் 2026 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்நாடு உள்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளதாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் என்பது அரசு வாகனங்கள் இயக்குவதற்கான அடிப்படை நிபந்தனை. இன்சூரன்ஸ் மற்றும் காலாவதியான வாகனங்களை இயக்குவது சட்ட விரோதம் மட்டுமல்ல, உயிர்ப் பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்து என்றும் 2018 முதல் இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்கிய வாகனத்தை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்சூரன்ஸ் இல்லாத அரசு வாகனத்தில் உயிரிழந்ததால், அரசு நேரடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.விபத்து குறித்து பூவந்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.