Accident caused by fog Photograph: (police)
பனிமூட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து ஐடி ஊழியர் காருடன் நீர் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் யுவராஜ் மேத்தா (27). இவர் மென் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பணியை முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து யுவராஜ் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கருகே 500 மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்த பொழுது வழியில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாலையின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு சாலையை விட்டு கார் தடம் புரண்டது.
இந்த விபத்தில் அருகில் இருந்த 30 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் கார் மூழ்கியது. காருடன் நீரில் மூழ்கிய யுவராஜ், தனது தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து நடந்த விபத்து குறித்து கூறியுள்ளார். உடனே தந்தை காவல்துறைக்கு தகவல் அளித்ததுடன், சம்பவ இடத்திற்கு நேரில் வந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்தனர். காரின் மேற்புறம் நின்று கொண்டு யுவராஜ் அலறிய சத்தம் கேட்டது. இருப்பினும் யுவராஜை உடனடியாக மீட்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
அந்த பள்ளத்தில் இருந்த தண்ணீர் மிகவும் குளிர்ச்சியுடன் இருந்ததால், தீயணைப்பு துறையினர் தண்ணீரில் இறங்க தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் 4.30 மணி நேரத்திற்குப் பிறகு மயங்கிய நிலையில் யுவராஜ் மீட்கப்பட்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Follow Us