ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கடையில் வேலை செய்து வந்த பிரியாணி மாஸ்டருடன் ஏற்பட்ட முறையற்ற தொடர்பு காரணமாக மனைவியே கணவனை கூலிப்படை வைத்துக் கொல்வதற்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மேவளூர்க்குப்பம் பகுதியில் இங்கு வசித்து வருபவர்கள் ஹரிகிருஷ்ணன்-பவானி தம்பதி. இவர்கள் பேரம்பாக்கம் தண்டலம் சாலையில் பிரியாணிக் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தனர்.  இந்நிலையில் மேவளூர்க்குப்பம் சாலையில் இருசக்கர வாகனத்தில் கணவன் ஹரிகிருஷ்ணன் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் ஹரிகிருஷ்ணன் நூலிழையில் தப்பினார். இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் ஹரிகிரிஷ்ணனை செல்போனில் தொடர்பு கொண்ட ஆசாமிகள் சிலர் 'உன் மீது கார் மோதியது விபத்து அல்ல, திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்தோம். உன் மனைவிதான் உன்னை கொல்ல திட்டமிட்டார்' என தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஹரிகிருஷ்ணன் உடனடியாக இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் ஹரிகிருஷ்ணனின் மனைவி பவானி மற்றும் அவர்களுடைய பிரியாணிக் கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்த மதன்ராஜ் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த விஜய், மணிகண்டன், விக்னேஷ் உள்ளிட்ட ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹரிகிருஷ்ணனின் மனைவியான பவானிக்கும் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்த திருவாரூரைச் சேர்ந்த மதன்ராஜ் (36) என்பவருக்கும் இடையே முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தெரிந்து கொண்ட ஹரிகிருஷ்ணன் மனைவியையும் மதன்ராஜையும் பலமுறை எச்சரித்து வந்ததோடு கடையில் பல இடங்களில் கூடுதலாக சிசிடிவி கேமராக்களை வைத்துக் கண்காணித்து வந்தார்.

Advertisment

இந்தநிலையில் மதன்ராஜை வேலைக்கு வேண்டாம் என ஹரிகிருஷ்ணன் வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. தன்னுடைய முறையற்ற தொடர்புக்கு கணவன் இடையூறாக இருப்பதை அறிந்த பவானி கணவனை கொல்ல கூலிப்படைக்கு 15 லட்சம் ரூபாய் விலை பேசி முன்பணமாக 2 லட்சம் ரூபாய் கொடுத்தது தெரிய வந்தது. இதில் ஹரிகிருஷ்ணனை கொலை செய்ய ஏவப்பட்ட கூலிப்படைக்கும் பவானிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த கும்பல் ஹரிகிருஷ்ணனை தொடர்பு கொண்டு 'உன்னுடைய  மனைவி தான் உன்னை கொலை செய்ய திட்டமிட்டார்' என்பதை தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் ஹரிகிருஷ்ணனின் மனைவி பவானி, பிரியாணி மாஸ்டர் மதன்ராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த  விஜய், மணிகண்டன், விக்னேஷ் என மொத்தம் ஐந்து பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.