'Abandon the against Dharmapuri - Fulfill the 84-year-old dream' - Anbumani urges Photograph: (pmk)
'தருமபுரி மாவட்டத்தில் அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரு நாள் பயணமாக இன்று தருமபுரி நகருக்கு வருகை தருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முறையாவது தருமபுரி மாவட்ட மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அறிவிப்புகளை அவர் வெளியிட வேண்டும்' என பாமகவின் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பல மாவட்டங்களுக்கு செல்லும் போதெல்லாம் ‘‘எனக்கு வாக்களித்த மக்கள் வருந்தாத அளவிற்கும், வாக்களிக்காதவர்கள் தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தும் அளவிற்கும் எனது பணி இருக்கும்’’ என்று வசனம் பேசி வருகிறார். இந்த வசனத்தைக் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறையில் அது உண்மையில்லை. 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக் கட்சிகள் வீழ்த்தப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் தான் தருமபுரி மாவட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்து வருகிறார்.
மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பாக கடந்த ஆண்டு மார்ச் 11&ஆம் நாள் தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களையும் தாம் சமமாக நடத்துவதாகக் கூறியிருந்தார். ஆனால், தருமபுரி மீது வன்மம் கொண்டு, அங்கு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பதை அம்மாவட்டத்தில் உள்ள மக்கள் நன்றாக அறிவார்கள். மாவட்டத்தில் நிலவும் வறட்சியும், வறுமையும் தான் அதற்கு சாட்சி.
தருமபுரி மாவட்டத்தின் பெரும் பிரச்சினையே அங்கு வேளாண்மை, தொழில்துறை, சேவைத்துறை என எந்தத் துறையும் வலிமையாக இல்லாதது தான். அதனால் தான் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்குடன் தான் தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மையை வளர்க்கும் வகையில் தருமபுரி& காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் பலமுறை வலியுறுத்தி உள்ளேன். சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர்களும் பல முறை இக்கோரிக்கையை வலியுறுத்தினார்கள். ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.
தருமபுரி மாவட்டத்தை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தருமபுரி &- காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் 4&ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் பாமக சார்பில் நடத்தப்பட்ட அரை நாள் கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றி பெற்றது. ஆளும் திமுகவின் அடக்குமுறை மற்றும் மிரட்டல்களையும் மீறி தருமபுரி நகரத்தில் தொடங்கி, குக்கிராமம் வரை அனைத்து இடங்களிலும் வணிகர்கள் கடைகளை மூடி இந்தத் திட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்தனர். ஆனால், அதன்பிறகும் கூட இத்திட்டத்தைச் செயல்படுத்தாமல் மு.க.ஸ்டாலின் அரசு பழிவாங்கி வருகிறது.
அடுத்ததாக, தருமபுரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் பெருக்கும் வகையில், அங்கு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று 25 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பாமக மேற்கொண்ட பணிகளால் தருமபுரியில் சிப்காட் வளாகம் கடந்த 2021&ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. அங்கு 1733.40 ஏக்கர் வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதகப்பாடி, தடங்கம், அதியமான் கோட்டை, பாலஜங்கமன அள்ளி ஆகிய இடங்களில் 1183.05 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் தொழிற்சாலைகளை அமைக்க தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு தொழிற்சாலைகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியையும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு வழங்கி விட்டது. அதன்பின் 10 மாதங்களான பிறகும் கூட அங்கு தொழிற்சாலைகள் தொடங்கப் படாததற்கு தருமபுரி மாவட்டத்தின் மீது திமுக அரசுக்கு உள்ள வன்மத்தைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.
1941-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட தருமபுரி - மொரப்பூர் பாதையில் மீண்டும் போக்குவரத்துத் தொடங்கப்பட வேண்டும் என்பது தருமபுரி பகுதி மக்களின் 84 ஆண்டு கால கனவு. அந்தக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக போராடி, ரயில் நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வைத்தவன் நான். அதன்பிறகும் அந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வைத்து 2019-&ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டச் செய்ததும் நான் தான். மொத்தம் ரூ.358.95 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு தேவையான நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுத்திருந்தால் ஆண்டுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருக்கும்.
இந்தத் திட்டத்திற்கு தேவையான 78.55 ஹெக்டேர் நிலத்தில் 8.25 ஹெக்டேர் கையகப்படுத்தப் பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களில் 24.00 ஹெக்டேர் நிலங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், அதற்கு மாற்றாக மாற்று வழித்தடம் அமைக்கலாம் என தொடர்வண்டித் துறை அறிவித்துள்ள நிலையில் மீதமுள்ள 46.30 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், நான்கரை ஆண்டுகளாக திமுக அரசு எதையும் செய்யவில்லை.
தருமபுரியில் கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி நடந்த அரசு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தருமபுரி -மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். ஆனால், அதன்பின் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் ஒரு கைப்பிடி மண் கூட கையகப்படுத்தப்படவில்லை. இது தான் தருமபுரி மீதான திமுக அரசின் பாசம்.
எண்ணேகோல் புதூர் - தும்பலஅள்ளி கால்வாய்த் திட்டம், பஞ்சப்பள்ளி - புலிக்கரை கால்வாய்த் திட்டம், தொப்பையாறு கால்வாய்த் திட்டம், ஆணைமடுவு அணை உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்தவும் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. இதனால் தருமபுரி மாவட்டம் வறட்சியில் வாடுகிறது.
தருமபுரி மாவட்ட மக்களும் தமிழ்நாட்டின் குடிமக்கள் தான். அவர்கள் செலுத்தும் வரியில் தான் அரசு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரும், அமைச்சர்களும் அனுபவிக்கும் பல்வேறு வசதிகளுக்கு செலவு செய்யப்படும் நிதியில் அவர்களின் வரிப்பணமும் உள்ளது. இவற்றையெல்லாம் அனுபவித்துக் கொண்டு அவர்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களை பழிவாங்குவதும், அவர்கள் மீது வன்மத்தைக் காட்டுவதும் நியாயமல்ல. அவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கைவிட்டு தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்குத் தேவையான தருமபுரி& காவிரி உபரிநீர் திட்டம், சிப்காட் தொழில்வளாகம் ஆகியவற்றை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு , தருமபுரி- மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அறிவிப்புகளை நாளைய விழாவில் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.