திருவள்ளூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கொடூரத்தில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த சனிக்கிழமை 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் சிறுமியை தூக்கிச்சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அங்கிருந்து தப்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய பாட்டியிடம் தெரிவித்த நிலையில் சிறுமியை அவருடைய பாட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சிறுமி நடந்து சென்ற பகுதிக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது நபர் ஒருவர் சிறுமியை பின்தொடர்ந்து செல்வதும், திடீரென யாரும் இல்லாத நேரத்தில் அவர் அங்கிருந்து சிறுமியை தூக்கிச் சென்றது தொடர்பான பகீர் காட்சி வெளியாகி இருந்தது. இந்த காட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து எட்டு நாட்கள் ஆகியும் பாலியல் கொடூரத்தை நிகழ்த்திய நபரை போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
சம்பவம் நடந்த பகுதியில் பல மணி நேரம் அந்த நபர் நடமாடியதற்கான ஆதாரங்களும் இருந்துள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்னதாக இரண்டு பெண்களிடம் அவன் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான இளம்பெண் ஒருவர் கணவருக்காக காத்திருந்த போது அந்த பெண்ணிடமும் அந்த நபர் ஆபாச சைகை காட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தி பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நபரை பிடிப்பதற்காக போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில் அந்தப் பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்களை வைத்து அந்த நபரை பிடிப்பதற்கான முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அந்த பகுதியில் செயல்பாட்டில் இருந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளை டவர் டம் மூலம் கைப்பற்றி விசாரித்து வருவதோடு சம்பந்தப்பட்ட மொபைல் எண்களுக்கு கால் செய்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் இரண்டு முறை செல்போனில் பேசியதாகவும், இந்தியில் பேசியதாகவும் கூறப்படும் நிலையில் அந்தப் பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்களில் வடமாநில நபர்கள் பயன்படுத்திய எண்கள் என்ன என்பதன் அடிப்படையில் விவரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். இதற்காக தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியையும் போலீசார் கோரியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் ரயில் மூலமாக அந்த பகுதிக்கு வந்ததால் ரயில் நிலையங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.