கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்து த.வெ.க தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், சி.எம் சார் உங்களுக்கு ஏதாவது பழி வாங்கும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், என் தோழர்கள் மீது கை வைக்காதீர்கள் என்றும் பேசினார். அவருடைய கருத்துக்கு தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, விஜய்யின் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநரும், நடிகருமான அமீர் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், “நடிகர் நலத்திட்ட உதவிகள் செஞ்சா வாங்கிக்கங்க... அதுக்காக அவர் கிட்ட நாட்டை குடுக்கனும்னு நினைக்காதீங்க” என்று வைத்துள்ளார். தற்போது இது பேசு பொருளாக மாறியிருக்கிறது.