உடையும் இந்தியா கூட்டணி; அதிகாரப்பூர்வமாக வெளியேறிய ஆம் ஆத்மி!

aamaadmi

Aam Aadmi Party officially quit from India alliance

கடந்த மக்களவை தேர்தலில், பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக கடந்த 2023 ஆண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்த இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய மாநாட்டு கட்சி (என்.சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. ஆரம்பக் கட்டத்தில் இந்த கூட்டணிக்கு மக்களிடம் இருந்து பெரும் ஆதரவு இருந்த நிலையில், இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தார். அதன் பிறகு, பல கட்டங்களாக கூட்டங்கள் நடத்தி இந்தியா கூட்டணி, மக்களவைத் தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தோல்வியைச் சந்தித்தது.

இதனையடுத்து நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. இந்த தொடர் தோல்விகள், அந்த கூட்டணி தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ஆம் ஆத்மி, சமீபத்தில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலை தனித்து நின்று சந்தித்தது. இந்த தேர்தல் பரப்புரையின் போது ஆம் ஆத்மியும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டை வைத்து வந்தனர். இதன் எதிரொலியாக, அந்த தேர்தலில் ஆம் ஆத்மி அரசை வீழ்த்தி பா.ஜ.க வெற்றி பெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷி சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தோல்வி அடைந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது என்பது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சூழ்நிலையில், பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 4 மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தனித்தே போட்டியிட்டது. வழக்கம் போல் இடைத்தேர்தலிலும் இரு கட்சிகளும் வார்த்தை மோதலில் ஈடுபட்டன. இதில் பஞ்சாப்பின் லூதியானா தொகுதியிலும், குஜராத்தின் விஸாவதர் தொகுதியிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருந்தது. மக்களவைத் தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் என தொடர் தோல்வியால் பின்னடைவை சந்தித்த ஆம் ஆத்மிக்கு, இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி என்பது பெரும் உத்வேகத்தை கொடுத்தது.  இதே உத்வேகத்துடன், இந்தாண்டில் நடக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலிலும், 2027இல் குஜராத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே தொடர் தோல்விக்கு காரணம் என அரசியல் நோக்கர்கள் மட்டுமல்லாமல் கூட்டணி தலைவர்களே அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் சிங் கூறுகையில், “மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா கூட்டணி இருந்தோம் என்ற எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் அனைத்து தவறான கொள்கைகளையும் நாங்கள் எப்போதும் எதிர்த்து வருகிறோம். இன்றைய நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இல்லை என்று நாங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளோம். எங்கள் கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கானது” என்று கூறினார். 

Aam aadmi Arvind Kejriwal INDIA alliance
இதையும் படியுங்கள்
Subscribe