Aadiperukku; Newlyweds gather Photograph: (cuddalore)
சிதம்பரம் அருகே கொள்ளிடக்கரையில் ஆடிப்பெருக்கை பொதுமக்கள் மற்றும் திருமண தம்பதிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரை காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியாகும். இங்கு ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை தந்து விவசாயம் தங்கு தடையின்றி செழித்து வளர வேண்டும் என்று காவிரித் தாயை வழிபட்டு ஆடிப்பெருக்கை கொண்டாடினார்கள்.
இதில் ஆற்றில் ஓடும் தண்ணீரில் புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலையை விட்டால் குடும்பம் செல்வ செழிப்போடு வளரும் என்ற நம்பிக்கையால் தம்பதிகள் குடும்பத்தினருடன் வந்து மாவிளக்கு போட்டு மஞ்சள், கயிறு, கருகமணி, வெற்றிலை பாக்கு, அவல் பொறி, பழங்கள் வைத்து காவிரி தாயை வழிபட்டு திருமண மாலைகளை ஆற்றில் விட்டு தாலியைப் பிரித்துக் கோர்த்து புதிய தாலியை அணிந்து சென்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/03/a4646-2025-08-03-19-13-49.jpg)
ஆடிப்பெருக்கு விழாவுக்கு வரும் பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் ஆழம் அதிகம் உள்ளதால் ஆற்றில் இறங்கக் கூடாது என்று அண்ணாமலை நகர் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். நடராஜர் தீர்த்தவாரி குழு சார்பில் அதன் தலைவர் சேதுமாதவன், நிர்வாகிகள் ரமேஷ், வசந்த், கஜேந்திரன், செந்தில், தெய்வசிகாமணி, சந்திரகாசன் உள்ளிட்டவர்கள் கொள்ளிடக் கரைக்கு ஆடிப்பெருக்கு விழாவுக்கு வருகை தந்த அனைத்து பொதுமக்களுக்கும் அன்னதானம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்தனர்.