த.வெ.க நிர்வாகியான த.வெக. பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் துயர சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இலங்கை, நேபாளம் போல அரசுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சர்ச்சையான நிலையில், சில நிமிடங்களிலேயே அந்த பதிவை நீக்கினார். இருப்பினும், கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்டதாகக் கூறி ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த பரப்பான சூழ்நிலையில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கை நேற்று (03-10-25) விசாரித்த நீதிபதி செந்தில் குமாரிடம், சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனாவின் பதிவு காண்பிக்கப்பட்டது. இதனை கண்ட நீதிபதி, ‘ஆதவ் அர்ஜுனா என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?. நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா? ஒரு சிறிய வார்த்தை கூட பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும். புரட்சி தான் ஒரே வழி என பதிவிட்டதன் மூலம் அவரின் பின்புலத்தை விசாரிக்க வேண்டும். எனவே ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி, நடவடிக்கை எடுக்க ஆதவ் அர்ஜுனாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (04-10-25) காலை உத்தரகாண்ட் விமான நிலையத்திற்கு வந்த ஆதவ் அர்ஜுனாவிடம், செய்தியாளர் ஒருவர் நீதிமன்ற உத்தரவு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ஆதவ் அர்ஜுனா, “நாங்கள் நீதிக்காக வேலை செய்கிறோம். உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும்” என்று கூறி அங்கிருந்து கிளம்பினார்.
இன்று (04-10-25) உத்தரகாண்டின் டேராடூனில் நடைபெறவுள்ள 55வது சப் ஜூனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆதவ் அர்ஜுனா உத்தரகாண்ட் சென்றுள்ளார். கடந்த 1ஆம் தேதி தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆதவ் அர்ஜுனா 5 பேருடன் டெல்லி சென்றதாகத் தகவல் வெளியானது. இந்திய கூடைப்பந்து விளையாட்டு சம்மேளன தலைவர் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, அதற்கான பணிகளை முன்னெடுப்பதற்காக டெல்லி சென்றார் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.