பட்டியல் சமூக இளைஞரை மாற்று சமூக பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்யவிருந்த நிலையில் திடீரென அவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருநெல்வேலியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பச்சிராஜன். இவரது இரண்டாவது மகள் சிவமதி, நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவரும், தனியார் தொலைதொடர்பு நிறுவன ஊழியர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

Advertisment

இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவர, இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் அவர்கள் சிவமதியின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதனால் சிவமதிக்கும் ஆனந்த கிருஷ்ணனுக்கும் திருமணம் செய்து வைக்க ஆனந்த கிருஷ்ணனின் பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி,  திருமணம் வரும் 6ஆம் தேதி கோவில் ஒன்றில் நடைபெறுவதாக இருந்தது. இதனையொட்டி, ஆனந்த கிருஷ்ணனின் பெற்றோர் திருமண அழைப்பிதழ்களை அச்சடித்து உறவினர்களுக்கு விநியோகித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று (01-02-06) சிவமதி திடீரென வீட்டில் மயங்கி விட்டதாகக் கூறி அவரது தாய் மற்றும் தாய் மாமன் ஆகியோர் கண்டியப்பேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இந்த பரிசோதனையின் போது சிவமதியின் கழுத்தின் காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சிவமதியின் உயிரிழப்பு மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து அவரின் தாய் மற்றும் தாய்மாமாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சிவமதி தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் கூறியுள்ளனர். 

Advertisment

இதற்கிடையில், சிவமதியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஆணவக் கொலை செய்துள்ளதாக ஆனந்த கிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த சிவமதியின் பெற்றோரிடம், அவர்களது உறவினர்கள் திருமணத்தை நிறுத்துமாறு கூறியதாகவும், அதனால் இரு வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து சிவமதியை அவர்கள் ஆணவக் கொலை செய்ததாகவும் ஆனந்த கிருஷ்ணன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். சிவமதியின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகே, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.