சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட காதலனின் சடலத்துடன் இளம்பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாந்தேட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயதான சக்ஷம் என்ற இளைஞர். இவர் மீதும் மற்றும் இவரது நெருங்கிய நண்பர் ஹிமேஷ் மமித்வார் மீதும் காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் உள்ளனர். சக்ஷம், ஹிமேஷ் குடும்பத்தினருக்கு நன்று தெரிந்தவர் என்பதால் அடிக்கடி ஹிமேஷ் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் சக்ஷமுக்கும், ஹிமேஷ் மமித்வாரின் தங்கை 21 வயதான ஆஞ்சலினுக்குக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களது காதல் விவகாரம் ஆஞ்சலின் குடும்பத்தினருக்கு தெரியவர, இருவரும் மாற்றுச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இதனால் ஆஞ்சலின் குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் 27ஆம் தேதி மாலை சக்ஷம் தனது நண்பர்களுடன் ஜூனா கஞ்ச் பகுதியில் நின்று கொண்டிருந்தார். இதனை அறிந்த ஆஞ்சலின் சகோதரர்கள் ஹிமேஷ், சாஹில் (25), தந்தை கஜனன் மமித்வர் (45), ஆகியோர் அங்குச் சென்று காதலை கைவிடும்படி சக்ஷமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹிமேஷுக்கும் சக்ஷமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஹிமேஷ், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சக்ஷமை நோக்கி சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சக்ஷம், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர், அங்கு விரைந்து உடனடியாக ஆஞ்சலின் சகோதரர்கள் மற்றும் தந்தை ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து மறுநாள் சக்ஷமின் இறுதிச் சடங்கு அவரது வீட்டில் நடைபெற்றது. சாதி வேறுபாடுகள் காரணமாக காதலன் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த காதலி ஆஞ்சலின் மிகவும் மனமுடைந்துள்ளார். கதறி துடித்தப்படியே சக்ஷமின் இறுதி சடங்கில் ஆஞ்சலின் கலந்து கொண்டார். அங்கு சென்ற அவர், காதலன் இறந்த போதிலும் அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆஞ்சலின் விருப்பப்பட்டுள்ளார். அதன்படி, தனது உடலில் மஞ்சளும், நெற்றியில் குங்குமமும் பூசி சக்ஷமின் சடலத்துடன் ஆஞ்சலின் திருமணம் செய்து கொண்டார். இதனை கண்ட அங்குள்ளவர்கள், கண்கலங்கியபடியே நின்றுள்ளனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஞ்சலின், “நாங்கள் மூன்று வருடங்களாக காதலித்து வந்தோம். என் குடும்பத்தினருக்கு அது பற்றித் தெரியவந்தது. அவர் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால், எங்கள் குடும்பத்தினர் எங்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. என் குடும்பத்தினர் அவரைக் கொல்ல ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்தனர். காலையில் அவர் தனது அத்தையை இறக்கிவிட ஸ்டேஷனுக்குச் செல்லும் போது நாங்கள் பேசினோம். இது நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. மறுநாள் செய்தித்தாளில் இருந்து இதைப் பற்றி எனக்குத் தெரியவந்தது. யாரும் இதைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை. சக்ஷம் கொல்லப்பட்ட நாள், என் சகோதரர் காலையில் என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்தார். நான் எந்த வழக்கும் பதிவு செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. போலீசார் என் சகோதரனிடம், வழக்குகளை இட்டுக்கட்டுவதற்குப் பதிலாக, ஏன் சம்பந்தப்பட்ட நபரைக் கொல்லக்கூடாது என்று சொன்னார்கள்? என் சகோதரர் அதை ஒரு சவாலாக எடுத்து சக்ஷமை கொன்றார்.
அவர் இறந்த பிறகும், நான் அவருடையவராகவே இருப்பேன். எனக்கு நீதி வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களான என் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் சக்ஷமை காதலித்து வந்தேன். ஆனால் என் தந்தை சாதி வேறுபாடுகள் காரணமாக எங்கள் காதலை எதிர்த்தார். சக்ஷமின் மரணத்திலும் கூட எங்கள் காதல் வென்றுள்ளது. ஆனால், என் தந்தையும் சகோதரர்களும் தோற்றனர்” என்று உருக்கமாக பேசினார்.
தனது வாழ்நாள் முழுவதும் சக்ஷமின் வீட்டில் மருமகளாக வாழ ஆஞ்சலின் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. காதலனின் சடலத்துடன் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சி அவர்களின் காதலை அழியாததாக மாற்றும் சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/02/5-2025-12-02-10-56-47.jpg)