டெல்லி உத்தம் நகரைச் சேர்ந்தவர் தருண் (26). டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயின்று வந்த இவர், பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் கையில் வைத்திருந்த கம்பிகள், கற்கள் மற்றும் சில ஆயுதங்களைக் கொண்டு அவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தருண், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisment

இந்த விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஹோலி பண்டிகையன்று தருண் குடும்பத்தை சேர்ந்த 11 வயது சிறுமி அவரது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமி, கீழே நின்றிருந்த தனது தந்தையின் மீது தண்ணீர் பலூனை வீசியுள்ளார். இதில், அந்த நீர் சிதறி பக்கத்துக்கு வீட்டுப் பெண்ணின் மீது விழுந்துள்ளது. இதன் காரணமாக, அந்த பெண் தனது உறவினர்களை அழைத்து வந்து, அவர்களிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் நடந்த சம்பவம் குறித்து, தருணின் குடும்பத்தினர் அவர்களிடம் மன்னிப்பு கோரினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து சண்டையிட்டனர். பிறகு, பேசி இந்த பிரச்சனை சமரசம் செய்யப்பட்டது.  

Advertisment

இருப்பினும், நீண்ட நேரத்திற்குப் பிறகு அந்த பெண்ணின்  உறவுக்கார கும்பல் ஒன்று தருணை ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். காரணம், அக்கம்பக்கத்தாரான இவர்கள்  வேறுவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த நீங்கள் எப்படி எங்கள் மீது தண்ணீரை ஊற்றலாம் என்று கூறி இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் எட்டு பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருதரப்பினரும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.