சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தில் வசிக்கும் சண்முகத்தின் மகன் ரகுராமன் (23), ஆகஸ்ட் 24-ஆம் தேதி இரவு, கந்து வட்டிக் கொடுமையால் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், காவல்துறையினர் உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, ரகுராமனின் தாய் செண்பகச் செல்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், “என் மகளின் திருமணத்திற்காக, 5 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியில் வசிக்கும் சேகரின் மனைவி கவிதாவிடம் 2.5 லட்சம் ரூபாய் வட்டிக்குக் கடன் வாங்கினோம். இதற்கு 10 நாட்களுக்கு 14,000 ரூபாய் வட்டி கட்டி வந்தோம். கடந்த 5 ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் வட்டியாகக் கொடுத்தும், வட்டியையும் அசலையும் கேட்டு தொந்தரவு செய்தனர்,” என்றார்.
இதுகுறித்து, கிள்ளை காவல் நிலையத்தில் 4 முறை கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்படுவதாகப் புகார் அளித்ததாகவும், ஆனால் காவல்துறையினர் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி, பணத்தைத் தவணை முறையில் கொடுக்க ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் கவிதா, “பணம் கொடுக்கவில்லை என்றால், உங்கள் வீட்டை எழுதிக் கொடுங்கள்,” என்று மிரட்டினார். இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, சண்முகத்தின் குடும்பத்தினரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் அசல் பணத்தை வாங்கி கவிதாவிடம் கொடுத்தனர். இருப்பினும், மீதிப் பணம் கொடுக்கத் தாமதம் ஏற்பட்டதால், கவிதாவும் அவரது உறவினர் சத்யா, கவிதாவின் மகள் காயத்ரி, மகன் அலெக்ஸாண்டர் ஆகிய 4 பேரும் ரகுராமனை நேரிலும், தொலைபேசியிலும், வாட்ஸ்அப்பில் மிகவும் கீழ்த்தரமாகப் பேசி மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்.
“இதனால், என் மகன் அவமானத்தைத் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,” என்று செண்பகச் செல்வி கூறினார். இதுகுறித்து கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். அதன்பேரில், உடலைப் பெற்றுக்கொண்டதாகக் கூறினார்.