வேலூர் மாநகர் பெரிய அல்லாபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமார் (23) என்ற இளைஞர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (08.08.2025) காலை பிரியாணிக்காக இஞ்சி பூண்டு அரைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பாகாயம் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பினனர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், செந்தில்குமார் பிழைப்புக்காக வந்த இடத்தில் மின்தாக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் இஞ்சி பூண்டு அறைத்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி துடிதுடித்து கீழே விழும் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடன் சக ஊழியர்கள் மின்சாத்தை துண்டித்து அவரை மீட்டு செல்கின்றனர். இந்த காட்சி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.