சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த  தோழர் நல்லக்கண்ணு இன்று (25/02/2026) மறைந்துள்ளார்.அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நல்லகண்ணு மறைவிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் இரங்கல் அறிக்கையில், 'இந்திய விடுதலைப் போராட்டத்தின் வாழும் சாட்சியமாகவும் நம்மிடையே வாழ்ந்தவரும், தமிழ்நாட்டின் விவசாய–தொழிலாளர் இயக்கங்களின் அசைக்க முடியாத தூணாகவும், பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடித் தலைவருமான அய்யா  இரா. நல்லக்கண்ணு அவர்களின் மறைவு செய்தி ஆழ்ந்த துயரிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

சிறுவயதிலேயே அரசியல் உணர்வுடன் போராட்டக் களத்தில் கால் பதித்த தோழர் நல்லக்கண்ணு அவர்கள், 1937 மாகாணத் தேர்தல் காலத்திலேயே வாக்குரிமை இல்லாத வயதிலும் மக்கள் உரிமைக்காக குரல் எழுப்பியவர். தூத்துக்குடி பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக அரிசி சேகரித்துச் சென்ற 5–6 வயது சிறுவனிலிருந்து, விவசாயிகள், உழைப்பாளிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவராக அவர் உருவெடுத்தார்.

காங்கிரஸ் இயக்கத்தில் தொடங்கி, இளமைப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு  கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், ‘செங்கொடி’யை தன் உயிராகக் கருதி போராடினார். வெள்ளையனே வெளியேறு இயக்கம், உப்பளத் தொழிலாளர்களின் போராட்டங்கள், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான விவசாய இயக்கங்கள், தீண்டாமை ஒழிப்பு, கோவில் நுழைவு போராட்டங்கள் என விடுதலைப் போராட்டத்தையும் சமூக நீதி போராட்டத்தையும் ஒன்றிணைத்துப் போராடியவர் அவர்.

Advertisment

“நிலம் உழுபவருக்கே” என்ற முழக்கத்தை நடைமுறை அரசியலாக்கி, தமிழ்நாட்டில் விவசாயிகள் இயக்கத்துக்கான வலுவான அடித்தளத்தை அமைத்தவர்களில் முக்கியமானவர் அய்யா நல்லக்கண்ணு அவர்கள். அடக்குமுறை, கைது, சித்திரவதை, கட்சி தடை ஆகிய அனைத்தையும் எதிர்கொண்டும், தனிப்பட்ட கசப்போ பழிவாங்கும் எண்ணமோ இன்றி, மக்கள் விடுதலையே தன் இலக்காகக் கொண்டிருந்த அவரது வாழ்க்கை ஒரு அரிய பாடம்.

பாரதியார், மார்க்ஸ், லெனின், பெரியார், அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரின் சிந்தனைகளால் வடிவெடுத்த அவரது அரசியல் பயணம், எளிமை, தன்னலமின்மை, தியாகம் ஆகியவற்றின் உச்சமாகத் திகழ்ந்தது. தமிழக அரசின் உயரிய தகைசால் தமிழர் விருது 2022ல் பெற்ற போதும், அதற்கான பரிசுத்தொகையை மக்களுக்கே அர்ப்பணித்த அவரது செயல், அவரது மனிதநேயத்தை மீண்டும் வெளிப்படுத்துகிறது.

“நாங்கள் இதைவிட மோசமான காலங்களையும் பார்த்திருக்கிறோம்” என்ற அவரது அமைதியான சொற்கள், இன்றைய தலைமுறைக்கும் போராடும் நம்பிக்கையை அளிக்கின்றன.

அய்யா அவர்களுடன் நெருங்கி பழகும் நல்வாய்ப்பை 1996 முதல் பெற்றேன். அந்த காலக்கட்டத்தில் பல நெருக்கடிகளை நாங்கள் சந்தித்த போது எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர் தோழர் நல்லக்கண்ணு அவர்கள். 1998ல் கோவை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்கள். அப்போது கோவை மிகவும் பதட்டமாக இருந்த காலக்கட்டம்.  தேர்தல் பரப்புரையில் அவர் பயன்படுத்திய வாகனத்தில் தமுமுக கொடி கட்டப்படவில்லை. இதை கவனித்த ஐயா அவர்கள் உடனே கொடியை கட்ட உத்தரவிட்டார்கள்.  நாங்கள் இப்பதட்டமான சூழலில் எங்கள் கொடியை தவிர்க்கலாமே என கேட்டபோது தமுமுக தான் எனக்கு மிகவும் முக்கியம், வெற்றி தோல்வி இரண்டாம் பட்சம் என்று சொன்ன அற்புத மனிதர் அவர். வெறும் கடலை மிட்டாய சாப்பிட்டே தேர்தல் பணிகளை மேற்கொண்டது இன்றும் பசுமையான நினைவாக உள்ளது.

மகத்தான அந்தப் போராளியின் மறைவால் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறும், தமிழ்நாட்டு மக்கள் இயக்கங்களும் ஒரு மாபெரும் மனிதனை இழந்துள்ளன. அவரது நினைவும், அவர் காட்டிய பாதையும் என்றும் மக்கள் போராட்டங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

தோழர் நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும், போராட்டச் சகோதரர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என தெரிவித்துள்ளார்.