A woman dedicated 45 pounds of jewelry for Sri Andal appeared in a dream
தமிழ் கூறும் நல் உலகம் போற்றும் தெய்வம் ஸ்ரீ ஆண்டாள்.​ பக்தியின் உச்சமாகவும், தெய்வீகக் காதலின் அடையாளமாகவும், தலைமுறைகள் தாண்டியும் மக்களின் இதயங்களில் வாழ்ந்து வரும் ஸ்ரீஆண்டாள், இன்றும் தன் பக்தர்களின் வாழ்க்கையில் அதிசயங்களை நிகழ்த்துகிறாள் என்பதற்கான ஒரு நேரடி சாட்சியாமாக சிவகாசியில் நடந்த இந்த சம்பவம் (கனவு) அமைந்துள்ளது.
சிவகாசியைச் சேர்ந்த ஜோதிலட்சுமி என்பவர், சிறு வயது முதலே ஆண்டாளின் மீது அளவில்லாத பக்தி கொண்டவர். தினமும் வீட்டிலேயே மனமுருகி ஆண்டாளை வழிபடும் அந்தப் பெண்ணின் வாழ்க்கையில், ஒரு நாள் இரவு, ஒரு தெய்வீக அனுபவம் நிகழ்ந்துள்ளது. ஜோதிலட்சுமியின் கனவில் ஸ்ரீ ஆண்டாள் தோன்றி, ‘எனக்கு உன் தங்க நகைகளைக் கொடு’ என்று கேட்டதாக அவர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் கூறியிருக்கிறார். எப்படியென்றால், இந்தக் கனவை அவர் ஒரு சாதாரண கனவாக எடுத்துக்கொள்ளவில்லை. அதை ஆண்டாளின் நேரடி அழைப்பாகவே கருதிய ஜோதிலட்சுமி, எந்தவித தயக்கமும் இன்றி தனக்குச் சொந்தமான 45 பவுன் தங்க நகைகளை, பச்சைக்கல் பதித்த இரண்டு தங்க மாலைகள், ஒரு சங்கு பதக்க மாலை, ஒரு ஜோடி தங்கக் கொலுசு உள்ளிட்ட அனைத்து நகைகளையும் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஒப்படைத்துள்ளார்.
இது முழுக்க முழுக்க அவரது ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடாகவே நடந்த செயல் என்பதை ஆண்டாள் கோவில் தரப்பு நம்மிடம் உறுதி செய்தது. “ஆண்டாள் கேட்டாள்… நான் கொடுத்தேன்…”​ என்று அவர் சொன்ன அந்த எளிய வார்த்தைகள், அக்கோவிலில் இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. இன்றைய காலத்தில், பக்தி பல நேரங்களில் வார்த்தைகளாகவும் வேண்டுதல்களாகவும் மட்டுமே நின்றுவிடும் சூழலில்,​ தன் வாழ்நாள் சேமிப்பாக இருந்த நகைகளையே தெய்வத்திற்கு அர்ப்பணித்த ஜோதிலட்சுமியின் இந்த செயல்,​ உண்மையான பக்தி என்றால் என்ன?​ என்பதற்கான ஒரு வாழும் எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீ ஆண்டாள் கோவில் நிர்வாகத் தரப்பில் விசாரித்தபோது,​ “ஜோதிலட்சுமி ஒரு தீவிர ஆண்டாள் பக்தை. அவர் அடிக்கடி கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வார். சுமார் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆண்டாளை சேவிக்க வருவார். இந்த முறை, குடும்பத்துடன் வந்து, 45 பவுன் நகைகளை தானமாக வழங்கினார். இவ்வாறு பக்தர்கள் நகைகள் வழங்கும்போது, அறநிலையத்துறை விதிமுறைகளின்படி அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படும். அதன்படி, ஜோதிலட்சுமியின் ஆதார், பான் கார்டு விவரங்கள் பெறப்பட்டன. நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டது. நகை வாங்கிய ரசீது விவரங்களும் பதிவு செய்யப்பட்டன. ஜோதிலட்சுமியின் குடும்பம் பெரும் செல்வவளம் கொண்டதா இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் அவர்கள் ஆண்டாளின் மீது அளவற்ற நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர்கள். அந்த அடிப்படையில்தான், கனவில் வந்த ஆண்டாளின் அழைப்பை ஏற்று, இந்த நகைகளை வழங்கியுள்ளனர்” என்று தெரிவித்தனர்.
பக்தி என்பது சொற்களல்ல…சொத்துக்களல்ல… அது ஒரு மனநிலை… ஒரு நம்பிக்கை… ஒரு தியாகம்… ஜோதிலட்சுமியின் இந்த செயல், ஆண்டாளின் மீது கொண்ட அன்பின் உச்ச வெளிப்பாடாக மட்டுமல்ல, இந்த காலத்தில் அரிதாகவே காணப்படும் உண்மையான பக்தியின் சாட்சியாகவும் நிலைத்திருக்கும்.
Follow Us