A video goes viral on Jayalalithaa's anniversary
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (05-12-25) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நிர்வாகிகள் ஒன்றாகப் பேரணியாகச் சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். இதனிடையே, அதிமுக சார்பில் ஜெயலலிதாவைப் பெருமைப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டு வைரலாகியுள்ளது.
ஒரு பெண்ணுக்கு ஜெயலலிதாவின் ஆட்சி எத்தனை வகையில் உதவி செய்தது என்பதைக் காட்டும் அந்த வீடியோவில், ‘என்னைப் பெற்றெடுக்கவில்லை என்றாலும், என்னைப் பிள்ளையாக வளர்த்தவர் எங்கள் அம்மா’ என்பதாக பின்னணிக் குரல் ஆரம்பிக்கிறது. அதில் காட்டப்படும் குழந்தை வளர்ந்து பள்ளியில் படிக்கும்போது, விலையில்லா சீருடை, விலையில்லா புத்தகப்பை, விலையில்லா கல்வி உபகரணங்கள், விலையில்லா சைக்கிள், தினந்தோறும் விதவிதமான சத்துணவு ஆகியவற்றை அனுபவித்து வளர்கிறது. உடல்நிலை சரியில்லை என்றால் குறைந்த விலையில் மருந்துகளை வாங்க அம்மா மருந்தகம், பெண் பிள்ளைகளின் உடல் உபாதைகளைக் கருத்தில் கொண்டு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கியதைக் காட்டப்படுகிறது.
பள்ளிக்கல்வி முடிந்து கல்லூரிக்குச் சென்றதும் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கியதோடு, விலையில்லா லேப்டாப்பும் கொடுத்து அழகு பார்த்ததைச் சொல்கிறது காட்சிகள். படிப்பை முடித்தப் பெண்களின் அடுத்தக் கட்டமான திருமண வாழ்க்கையில் அடியெடுத்துவைக்கும்போது, தாலிக்குத் தங்கம், திருமண உதவித் திட்டம் மூலம் சீர்வரிசைக் கொடுத்ததையும் வீடியோ சுட்டிக்காட்டுகிறது. அதற்கடுத்து அப்பெண் இன்னொரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம் மற்றும் ஏழை, எளியோருக்குச் செயல்படுத்தப்பட்ட வீடுகட்டும் திட்டம் குறித்தும் பேசியபடி அந்த வீடியோ முடிகிறது.
இவற்றையெல்லாம் செய்தது எங்கள் அம்மா என்று வீடியோ முழுக்கச் சொல்லிக்கொண்டே வந்து, வீடியோ இறுதியில் அந்த அம்மா வேறு யாருமில்லை, ஜெயலலிதா தான் என்கிறது அக்குரல். வீடியோ முடிவடையும்போது, ‘அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் அரியணையேற்றுவோம்’ என்றும், ‘நல்லாட்சி மலர்ந்திட இணைந்திடுங்கள் எடப்பாடியாருடன்’ என்றும் முடிகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Follow Us