திருமலா பால் எனும் தனியார் பால் நிறுவன மேலாளர் குடிசையில் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அது கொலையா என்ற சந்தேகக்கட்டத்தை அடைந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நவீன் பொல்லினேனி(37). கடந்த மூன்று வருடங்களாக சென்னையில் தனியார் பால் நிறுவனத்தில் கருவூலாக மேலாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் பால் நிறுவனத்தில் கணக்கு வழக்குகளில் கையாடல் செய்தன் மூலம் 44.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நவீன் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக பால் நிறுவன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் 5 கோடி ரூபாய் பணத்தை நவீன் பொல்லினேனி கொடுத்ததாகவும், மீதி பணத்தை விரைவில் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக பால் நிறுவனம் தரப்பில் காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மாதவரம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
மேலாளர் நவீன் பொல்லினேனி அவமானத்தில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவருடைய சகோதரி மற்றும் சம்பந்தப்பட்ட பால் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் செய்துவிட்டு சொந்தமாக அவர் வாங்கி வைத்திருந்த நிலத்தில் உள்ள குடிசையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மின்னஞ்சலை பார்த்தது அதிர்ந்துபோன நவீனின் சகோதரி மாதவரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். வீடு உள்ளிட்ட பல இடங்களில் நவீனை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு சொந்தமான காலி நிலத்தில் இருந்த குடிசையில் தூக்கிட்ட நிலையில் உடல் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த புழல் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/11/a4366-2025-07-11-08-25-20.jpg)
இந்நிலையில் இந்த சம்பவம் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் நகர்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நவீன் தற்கொலை செய்து கொண்ட தாகக் கூறப்படும் குடிசையில் தற்கொலையில் ஈடுபடுவதற்காக சேர் உள்ளிட்ட எந்த ஒரு பொருளும் இல்லை. இரு கைகளையும் அவராக பின்புறம் கட்டிக்கொண்டு குடிசையின் உள் பகுதியில் ஏறி எப்படி தூக்கிட்டுக் கொள்ள முடியும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
உயிரிழந்த மேலாளர் நவீன் ஆஃப்-ரோட் பிரியர் என்பதும் அவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜீப்புகளை இதற்காக வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதற்காக ஒரு வாட்ஸ் அப் குரூப்பையும் வைத்துள்ளார். ஆஃப்-ரோட் என்பது மலைப்பாங்கான பகுதிகளில் சாகசமாக ஜீப்புகளை இயக்குவதாகும். அந்த அளவிற்கு மன தைரியம் கொண்ட நபர் எப்படி தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும் என்ற ஒன்றும் இந்த விவகாரத்தில் கேள்வியாக எழுந்துள்ளது