A tragic outcome due to the absence of a name in the voter list in west bengal
தமிழ்நாடு, புதுவை, கேரளம் மற்றும் மேற்குவங்கம் உட்பட ஐந்து மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில், கடந்த சில மாதங்களாகச் சிறப்புத் தீவிர வாக்காளர் வரைவு பட்டியல் திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்த எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடிகள் இருப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். குறிப்பாக, பல்வேறு காரணங்களைக் காட்டி, பெரும்பாலான திருமணமான பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், உயிருடன் இருக்கும் பலரை, இறந்து விட்டதாகக் கூறி அவர்களின் பெயரை நீக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவ்வாறு பெயர் நீக்கப்பட்டவர்களில் சிலரை நேரடியாக அழைத்துக் கொண்டு டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்று, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மம்தா முறையிட்டார். இருப்பினும், இங்கு முறையான பதில் கிடைக்காத காரணத்தினால், இது சம்பந்தமாக அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது சம்பந்தமாக நேரடியாக, நீதிமன்றத்தில் ஆஜராகிய மம்தா, எஸ்.ஐ.ஆர் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது குறித்துப் பல முறை கடிதம் எழுதிய நிலையிலும், தேர்தல் ஆணையம் எந்த விதப் பதிலும் அளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இதன் காரணமாக, நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தது. இதையடுத்து, எஸ்ஐஆர் பணிகளை முறையாக மேற்கொள்ள நீதிபதிகளின் மேற்பார்வையில் இந்த பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த எஸ்ஐஆர் பணிகள் நிறைவு பெற்று, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில், 6 கோடியே 44 லட்சம் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. மேலும், 63 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத காரணத்தினால் பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ரபீக் அலி காஸி(44) மற்றும் ஜல்பைகுரியை சேர்ந்த கவுரங் டே(62) ஆகியோர் கடந்த 3ஆம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இது, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us