மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து. மெக்கானிக் தொழில் செய்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாலினி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு அப்பெண்ணின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. வைரமுத்து தரப்பில் பதிவு திருமணத்திற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வைரமுத்துவை வழிமறித்த கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளனர். மீட்கப்பட்ட வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளம்பெண் குடும்பத்தினர் தான் கொலை செய்ததாக வைரமுத்துவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/17/a5268-2025-09-17-13-06-07.jpg)
இது தொடர்பாக மயிலாடுதுறை நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முன்னதாக இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட வைரமுத்துவிற்கு மாலினியின் தாயார் விஜயா(45) கொலை மிரட்டல் கொடுத்த வீடியோ காட்சி ஒன்று வைரலாகி இருந்தது. தொடர்ந்து வைரமுத்துவின் உடலை வாங்காமல் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கொலைக்கு காரணமான விஜயா மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெண்ணின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போது வரை விஜயா, குகன், அன்புநிதி, பாஸ்கர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அண்மையில் தூத்துக்குடியில் கவின் என்ற இளைஞர் காதலால் ஏற்பட்ட எதிர்ப்பில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.