ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் ஒன்றரை வயது குழந்தையை தாய் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் கவின் பிரசாத்- அமராவதி தம்பதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற மகன் இருந்தார். பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கவின் பிரசாத் பணியாற்றி வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் வீடு திரும்பிய பொழுது அதிகாலை தண்ணீர் குடிப்பதற்காக சமையல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது மனைவி அமராவதி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததாகவும், குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும் வெள்ளோடு காவல் நிலையத்தில் பிரசாத் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக அங்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் தன்னுடைய மகள் அமராவதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இறப்பில் சந்தேகம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருவரின் கழுத்தும் நெறிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனடிப்படையில் சந்தேகம் மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கவின் பிரசாத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரையும் கொலை செய்தது தான் என கவின் பிரசாத் ஒப்புக்கொண்டார். எதனால் இந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்பது தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.