உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் அருகே உள்ள மான்சா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்ட நிலையில் கூட்டத்தில் மின்சாரம் பாய்ந்துள்ளதாகப் புரளிகள் பரவிய நிலையில் அங்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஹரித்வார் போலீஸ் எஸ்.எஸ்.பி. பிரமேந்திர சிங் தோபல் கூறுகையில், “ கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் காயமடைந்ததாகத் தகவல்கள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
சுமார் 35 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். அதில் 6 பேர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கோயில் பாதையில் கீழே உள்ள படிக்கட்டுகளில் 100 மீட்டர் அளவில் மின்சாரம் தாக்கியதாகப் பரவிய வதந்தியால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் இது குறித்து விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். ஹரித்வார் மாவட்ட ஆட்சியர் மயூர் தீட்சித் கூறுகையில், “யாரோ ஒருவர் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததாக வதந்தியைப் பரப்பியதாகப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் நாங்கள் கண்டறிந்தோம். காயமடைந்தவர்களையோ அல்லது இறந்தவர்களையோ பார்க்கும்போது, மின்சாரம் தாக்கியதற்கான அத்தகைய எந்த அறிகுறியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
கூட்ட நெரிசலுக்குக் காரணமான வதந்தியை யார் பரப்பினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்துவோம். மேலும் அங்குள்ள கேமராக்கள் மற்றும் பிற வழிகளைப் பயன்படுத்தி விசாரணை நடத்த ஒரு மாஜிஸ்திரேட் விசாரணை அமைக்கப்படும். 6 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், “வதந்தி காரணமாக மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உதவ அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்த கூட்ட நெரிசலில் சிக்கிக் காயமடைந்தவர்களில் ஒருவர் கூறுகையில், “கோயில் வளாகத்திற்கு 20 முதல் 25 படிகள் முன்னதாக, கூட்டம் கட்டுப்படுத்த முடியாததாக மாறியது. நான் 10 முதல் 12 பேருடன் கீழே விழுந்தேன். என் குடும்ப உறுப்பினர்களில் 3 பேரைக் கண்டுபிடித்து விட்டேன். ஆனால் 2 பேரை இன்னும் காணவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/27/haryanan-stempade-2025-07-27-12-18-34.jpg)