வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தின் ஒரு பகுதியில் இன்று (18-10-25) பிற்பகல் திடீரென தீ பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், விமான நிலையத்தில் இருந்து கரும்புகை வெளியேறி மக்களை பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் நடந்த உடனடியாக, விமான நிலைய தீயணைப்புத்துறை, வங்கதேச விமானப்படை தீயணைப்புப் பிரிவு மற்றும் பிற சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
வங்கதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், தீயணைப்பு சேவை மற்றும் வங்கதேச விமானப்படையின் இரண்டு தீயணைப்புப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அனைத்து விமானப் போக்குவரத்து சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.