வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் வனச்சரகத்துக்குட்பட்ட தனியாருக்கு சொந்தமான சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சாத்கர் மலை பகுதி. இப்பகுதியில் அமைந்துள்ள ஏரிக்கு அருகே உயிரிழந்து அழுகிய நிலையில் இரண்டு பெரிய யானை, ஒரு குட்டியானை என 3 யானைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

கடந்த வாரம் பேர்ணாம்பட் வனச்சரகத்துக்குட்பட்ட டிடி.மோட்டூர் அடுத்த சிந்தகனவாய் வனப்பகுதியில் 6 வயதுடைய யானை உயிரிழந்திருந்தது. அதற்கு 20 நாட்களுக்கு முன்பு அறவட்லா வனப்பகுதியில் உயிரிழந்த யானை எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டது. அந்த வகையில் 20 நாட்களுக்குள் பேரணாம்பட் வனச்சரகத்தில் மட்டும் 5 யானைக உயிரிழந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் சாத்கர் மலையில் மூன்று யானை உயிரிழந்த இடத்தில் ஆய்வு செய்த பிறகு, முதன்மை தலைமை வன பாதுகாவலர் மாரிமுத்து அளித்த பேட்டியில், ‘‘பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் அருகில் உள்ள தனியார் வனப்பகுதியில் உள்ள நீர் நிலை, அதன் அருகில் யானைகள் இறந்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வு நடத்தியதில், ஒரு யானை குட்டி ஒன்று நீர் நிலையில் இறந்துள்ளது. அந்த குட்டியின் வயது இரண்டு முதல் மூன்று இருக்கலாம். நீர் நிலையின் கரையில் இருந்து 10-20 மீட்டரில் நான்கு முதல் ஐந்து வயதுடைய யானையின் உடலும், மற்றொரு இடத்தில் ஆறு முதல் ஏழு வயதுடைய யானையின் உடலும் அழுகிய நிலையில் இருந்தது. யானைகள் இறப்புக்கான காரணம் குறித்து வனத்துறை அமைச்சர், கூடுதல் தலைமை செயலாளர், தலைமை வன பாதுகாவலர், தலைமை வன காப்பாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வன உயிரியின குற்ற தடுப்பு குழுவினரும் விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும், இறந்த யானைகளின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக சிறப்பு கால்நடை மருத்துவ குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 5க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் இருப்பார்கள். அப்போதுதான் யானைகள் இறப்புக்கான காரணம் தெரியவரும். இந்த பகுதிக்கு அருகிலே ஆந்திர மாநிலம் கவுன்டன்யா வனப்பகுதி உள்ளது. அங்குள்ள யானைகள் சரணாலயத்தில் இருந்து இந்த பகுதிக்கு யானைகள் வந்து செல்கின்றன. மழைக்காலம் என்பதால் யானைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் சிந்தகணவாய் அருகே இறந்த யானையின் உடல் பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்படுள்ளன. அதன் முடிவு வந்த பிறகுதான், யானை இறப்புக்கான காரணம் தெரியவரும். இந்த பகுதியில் மூன்று யானைகள் இறப்புக்கான காரணத்தை கண்டறிவதற்காக அங்குள்ள நீர் நிலையின் தண்ணீர் மற்றும் மண் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

Advertisment