A single dog bit 10 people in succession around the city! Photograph: (pudukottai)
நாய்களின் எண்ணிக்கையைப் போல நாய்களின் தொல்லைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள், பெரியவர்கள், ஆடு, மாடு என நாய்களால் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. சிலர் தெருக்களில் கோழி, மீன் கழிவுகளை கொட்டி நாய்களை நோய் பாதிப்பிற்கும் உள்ளாக்கி வருகின்றனர்.
இதேபோல, புதுக்கோட்டை நகரைச் சுற்றி ஒரே நாய் மூதாட்டி உள்பட 10 பேரைக் கடித்துள்ள சம்பவத்தால் புதுக்கோட்டை நகரப் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதாவது, இன்று வியாழக்கிழமை காலை புதுக்கோட்டை நகரை ஒட்டியுள்ள கட்டியாவயல் பகுதியில் ஒருவரைக் கடித்து விட்டு அங்கிருந்து ஓடி திருவப்பூரில் ஒரு மூதாட்டி உள்பட 2 பேரைக் கடித்த அந்த கருப்பு சிவலை நிற நாய் கழுத்தில் பெல்ட் அணிவிக்கப்பட்டுள்ளது. ஜெ.பி மஹால் பகுதியில் ஒருவரையும், அங்கிருந்து அரசு ஐடிஐ க்குள் நுழைந்து ஐடிஐ ஆசிரியர் ரமேஷை கடித்துவிட்டு பாலன் நகர் பக்கம் ஓடிச் சென்று கட்டுமானப் பணியில் இருந்த 5 பேரை கடித்துவிட்டு நகருக்குள் ஓடியுள்ளது.
வெவ்வேறு இடங்களில் ஒரே நாயிடம் கடிபட்ட ஆசிரியர் ரமேஷ், மணிகண்டன் உள்பட 10 பேரும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்று முதலுதவி சிகிச்சையும் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். இதில் திருவப்பூரில் மூதாட்டி கையில் நாய் கடித்துக் குதறியதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகமாக வெளியேறியதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், புதுக்கோட்டை நகருக்குள் ஓடிய வெறிநாய் இன்னும் எத்தனை பேரைக் கடித்துள்ளதோ என்கின்றனர் அச்சத்தில் உள்ள நகர வாசிகள்.
Follow Us