புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களிலும் நேற்று மாலை சில மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் பல ஊர்களிலும் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அறந்தாங்கியில் கழிவுநீர் கால்வாய் கான்கிரீட் தடுப்புச் சுவர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அறந்தாங்கி நகராட்சியில் 15 வது வார்டு கணபதி நகர்ப் பகுதியில் சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் செல்லும் கால்வாயின் இரு பக்கங்களிலும் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் ஒப்பந்தத்தை மெய்ஞானம் என்ற ஒப்பந்தக்காரர் எடுத்துப் பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அறந்தாங்கி பகுதியில் பெய்த கனமழையில் சுமார் 50 மீ நீளத்திற்கு கான்கிரீட் தடுப்புச் சுவர் உடைந்து சாய்ந்துள்ளது. கட்டுமானப் பணிகள் முடிந்து 2 வாரத்திலேயே ஒரு மழைக்கே தாக்குப் பிடிக்காமல் தடுப்புச் சுவர் சாய்ந்துள்ளது.
இதன் தரத்தை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தார்களா என்ற சந்தேகமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் விளக்கம் பெறத் தொடர்பு கொண்டால் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. ஆனால், நகர்மன்றத் தலைவர் ஆனந்த் மற்றும் வார்டு கவுன்சிலர் உதயா ஆகியோர் கூறும் போது, தரமான சிமெண்ட், எம் சாண்ட் கலவையில் தான் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. ஆனால் திடீரென பெய்த கனமழையால் தடுப்புச் சுவரை ஒட்டி போடப்பட்டுள்ள புது மண் தண்ணீர் வெளியேற விடாமல் தேக்கியதால் 50 மீ அளவிற்கு சுவர் சாய்ந்துள்ளது.
இந்த பழுதான பகுதிகளையும் அதே ஒப்பந்தக்காரர் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார். தடுப்புச்சுவர் சாய திடீர் கனமழையும் தண்ணீர் தேங்கியதுமே காரணம் என்றனர். தடுப்புச் சுவர்களுக்கு கம்பி இல்லாமல் கான்கிரீட் மட்டும் பயன்படுத்துவதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கம்பிகளை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.