சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இன்பரசு என்பவருக்குச் சொந்தமான பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கடையில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று (12.11.2025) திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது கடையில் உள்ள பிற பகுதியிலும் பரவியது. மேலும் அருகில் உள்ள பகுதிக்கும் தீயானது பரவியது.
இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் கடையில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து பொதுமக்களையும் காவல்துறையினர் வெளியேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடையின் அருகில் உள்ள மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மர்) இருந்து தீப்பொறி விழுந்து தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதே கடையில் 2 மாதங்களுக்கு முன்னதாக தீ விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு திருவேற்காட்டில் டயப்பர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான டயப்பர்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மின் கம்பியில் கண்டெய்னர் உரசியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டது என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us