A sanitation worker passed away after being electrocuted for rain in chennai
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (23-08-25) அதிகாலை முதல் சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையை பொறுத்தவரைக்கும், சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், கிண்டி, அடையாறு உள்பட பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னை கண்ணகி நகரில் இன்று அதிகாலை 5 மணியளவில் தேங்கிய மழைநீரில் கால் வைத்து தூய்மை பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்த வரலட்சுமி என்ற பெண், இன்று காலை வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஏற்கெனவே, அந்த பகுதியில் மின்சாரம் அவ்வப்போது மின்கசிவு ஏற்படுவதாக மின்வாரியத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மின்வாரியத்தின் அலட்சியத்தால் தான் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அப்பகுதிக்கு விரைந்து சாலை மறியலில் ஈடுபடுபவர்களிடம் இந்த பிரச்சனையை சரிசெய்து இதன் பிறகு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும், அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் கொட்டும் மழையிலும் குடைகளைப் பிடித்துக் கொண்டு வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.