கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டு காலமாக ‘ரோலக்ஸ்’ என்ற காட்டு யானை விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரையும் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது. அதோடு இந்த யானை பலரையும் கடுமையாகத் தாக்கியது. மேலும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தியும் வந்தது. இதன் காரணமாக ரோலக்ஸ் காட்டு யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இத்தகைய சூழலில் தான் வனத்துறையினர், தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்றுக் கடந்த சில மாதங்களாக தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோலக்ஸ் யானையைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தனர். அதாவது கும்கி யானைகள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, கும்கி யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அதன்படி கபில்தேவ், வாசிம், பொம்மன், சின்னதம்பி ஆகிய 4 கும்கி யானைகள் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகாமிட்டு மருத்துவ குழுவினரும் தொடர்ச்சியாக ரோலக்ஸ் யானையைக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்துள்ள இச்சிக்குழி என்ற பகுதிக்கு அருகே சுற்றித் திரிந்த ரோலக்ஸ் யானைக்கு இன்று (17.10.2025) அதிகாலை 4 மணியளவில் மயக்க மருந்து செலுத்தப்பட்டது. முதன்மை தலைமை வன பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையில், மருத்துவர்கள் ராஜேஷ் , வெண்ணிலா ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
இதையடுத்து 4 கும்கி யானையின் உதவியுடன் வனத்துறையினர் ரோலக்ஸ் காட்டிய யானை பிடித்துள்ளனர். இதனால் தொண்டாமுத்தூர் பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். மேலும் ரோலக்ஸ் யானையைக் கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி ரோலக்ஸ் யானையைப் பிடிக்கும் முயற்சியின் போது மருத்துவர் விஜயராகவன் என்பவர் ரோலக்ஸ் யானையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.