வாக்கு திருட்டு போல திருக்குறளை வைத்து தமிழர் ஓட்டுகளை எல்லாம் திருட முடியாது. எங்களுக்கான முதலமைச்சர் அறிவாலயத்தில் இருந்து வருவார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு நாக்பூரில் இருந்துதான் வருவார்கள். மோடியின் அமைச்சரவையில் 39 சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் மீதெல்லாம் 130வது சட்டப் பிரிவு பாயுமா?. அமித்ஷாவின் மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்க இது தொடை நடுங்கி பழனிசாமி ஆட்சி அல்ல என திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வந்த ஒன்றிய உள் துறை அமித்ஷா, டெல்லியில் இருந்து எதையும் கொண்டு வரவில்லை. வழக்கம் போலவே அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்.
திராவிட மாடல் அரசைக் குறை கூறுவதற்கு எதுவும் கிடைக்காமல், ஏற்கனவே கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பொய்களைப் பேசிச் சென்றிருக்கிறார். ‘திருக்குறளின் வழி நின்று ஆட்சி நடத்தி வருகிறார் மோடி’ எனச் சொல்லியிருக்கிறார். திருவள்ளுவர் உயிரோடு இருந்திருந்தால் குறள் பாடியே ஒன்றிய அரசைச் சாடியிருப்பார். பொய்களை மட்டுமே கொண்டு ஆட்சியை நடத்தி கொண்டிருக்கும் ஒன்றிய அரசு திருவள்ளுவர் எழுதிய பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று என்ற குறளைப் படிக்க வேண்டும். பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும் என்கிறார் திருவள்ளுவர். இந்தக் குறளை அமித்ஷா படித்தால் போதும் பொது வெளியில் பொய் வடைகளை சுடுவதை நிறுத்தி விடுவார். வாக்கு திருட்டு போல திருக்குறளை வைத்து தமிழர் ஓட்டுகளை எல்லாம் திருட முடியாது. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. என்ற குறளில், ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது என்கிறார் திருவள்ளுவர்.
அளவுக்கு அதிகமாக வரி வசூலிக்கும் அரசரை வழிப்பறிக் கொள்ளையனுடன் ஒப்பிடுகிறார். ஜி.எஸ்.டி என்ற கொடிய வரியை வசூலித்து மக்களை வஞ்சிக்கும் அமித்ஷா எல்லாம் திருக்குறளையும் திருவள்ளுவரையும் பேசத் தகுதியே இல்லை. சோனியா காந்திக்கு ஒரே லட்சியம், ராகுல் காந்தியை பிரதமராக்குவதே கனவு; அதேபோல திமுகவிற்கு உதயநிதியை முதல்வராக்குவதே கனவு. இந்த இரண்டுமே நடக்காது எனச் சொல்லியிருக்கிறார் அமித்ஷா. அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குச் செயலாளர் ஆனார்?. அவருடைய கிரிக்கெட் அறிவு என்ன? அவரை ஓட்டு போட்டா தேர்ந்தெடுத்தார்கள்? மக்கள் வாக்களித்தால் யாரும் முதல்வர் ஆகலாம். தமிழ்நாட்டில் யார்? முதல்வர் ஆக வேண்டும் என்பதை இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவரான அமித்ஷா முடிவு செய்ய முடியாது. கலைஞருக்கு இப்படித்தான் சொன்னார்கள். அவருடைய மகன் மு.க.ஸ்டாலினுக்கும் சொன்னார்கள். ஆனால், வரலாறு நடத்திக் காட்டியது.
துணை முதல்வர் உதயநிதியைப் பார்த்து அமித்ஷாவுக்கு பயம் வந்துவிட்டது போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு அவர் சமாதி கட்டுவார். எங்களுக்கான முதலமைச்சர் அறிவாலயத்தில் இருந்து வருவார். அதிமுக – பாஜக கூட்டணிக்கு நாக்பூரில் இருந்துதான் வருவார்கள். வரப்போகும் தேர்தலில் திமுக-வை வேரோடு பிடுங்கி எறிந்து, என்.டி.ஏ.வின் வெற்றியை அறிவிக்க வேண்டும்’ எனப் பேசியிருக்கிறார் அமித்ஷா. இந்தியாவில் இருந்தே வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டிய நச்சு செடி பாசிச பாஜக. இந்தியா கூட்டணியும் மக்களும் அதனை நிகழ்த்திக் காட்டுவார்கள்.130வது சட்டத்திருத்தத்தை 'கறுப்பு சட்டம்' என்கிறார் ஸ்டாலின்; அதைச் சொல்ல அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என்கிறார் அமித்ஷா. சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில் சிறையிருந்த நீங்கள் எல்லாம் இந்தச் சட்டத்தை இயற்ற தகுதியில்லாதவர். மோடியின் அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் மீது வழக்குகள் இருக்கிறது. இதில் 19 அமைச்சர்கள் மீது மிகவும் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.
மோடியின் அமைச்சரவையில் 39 சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் மீதெல்லாம் 130வது சட்டப் பிரிவு பாயுமா? தங்களுக்குப் பிடிக்காதவர்களை ஆட்சியிலிருந்து விரட்டக் கொண்டு வந்த சட்டத்தை 'கறுப்பு சட்டம்' என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பார்களாம். இது நல்ல சட்டம் என்றால், ஏன் பாஜகவுக்கு மட்டும் பொருந்துவதில்லை. 130வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டால் தனது ஏவல்துறையான அமலாக்கத்துறையை பயன்படுத்தி எப்படியெல்லாம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஒன்றிய பாஜக அரசு குழப்பங்களை ஏற்படுத்தும் என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். தனது அரசியல் எதிரிகளை மிரட்டி தன்னால் ஆளமுடியாத மாநில அரசுகளை முடக்குவதற்காக 130 ஆவது அரசியல் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்திருக்கிறது பாஜக.
ஏற்கெனவே அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளை அரசியல் எதிரிகளை பழிவாங்கப் பயன்படுத்திவரும் பாஜக, இப்போது தான் ஆள முடியாத மாநிலங்களின் முதல்வர்கள் அமைச்சர்களைக் கைது செய்து அவர்களது பதவியைப் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்தச் சர்வாதிகாரக் கருப்புச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் எழுப்பிய கண்டனக் குரல் அமித்ஷாவை ஆட்டங்காணச் செய்திருக்கிறது, அதனால்தான் உடனே தமிழ்நாட்டிற்கு ஓடி வந்து தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுச் சென்றிருக்கிறார். நாட்டைச் சர்வாதிகார நாடாக மாற்றத் துடிக்கும் பாஜகவின் பாசிசத் திட்டத்திற்கு எதிரான சிம்ம சொப்பனமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்பதைத்தான் அமித்ஷாவின் அபத்த உளரல்கள் நிரூபித்திருக்கிறது.
அமித்ஷாவின் மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்க இது தொடைநடுங்கி பழனிசாமி ஆட்சி அல்ல, தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தைக் காத்து நிற்கும் மானமிகு முதலமைச்சரின் அரசு, நாட்டின் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக’ என தேய்ந்த ரிக்கார்டு போலச் சொல்லியிருக்கிறார் அமித்ஷா. அமித்ஷாவுக்கு நாக்கு ஒன்றுதான். வார்த்தைகள்தான் வேறு வேறு.2018 ஜூலை 9-ம் தேதி சென்னையில் பேசிய அமித்ஷா, ‘நாட்டிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாகத் தமிழகம் உள்ளது’’என்று அன்றைக்கு இருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியைச் சொன்னார்.2016 ஏப்ரல் 14ம் தேதி திருச்சியில் பேசிய அமித்ஷா, நாட்டிலேயே ஊழல் மிகுந்தது ஜெயலலிதா ஆட்சிதான்’ என்றார். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சிகளை ஊழல் ஆட்சியென்று சொல்லிவிட்டு அதிமுகவோடு கூட்டணி போடுவது எல்லாம் அமித்ஷாவின் சாணக்கியத்தனத்தில் அடங்குமா?. ஊழலிலேயே திளைத்து ஊழலிலேயே தவழ்ந்து உலக மகா ஊழல் ஆட்சி நடத்திய அதிமுகவுடன் வெட்கமே இல்லாமல் ஊழல் கூட்டணி வைத்திருக்கும் அமித்ஷா, தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடக்கிறது என்று பேசுவைத் கேட்டால் சின்னக் குழந்தையும் கைகொட்டிச் சிரிக்கும்.
தேர்தல் பத்திர ஊழல், சிஏஜி சுட்டிக்காட்டிய 7.5 கோடி ஊழல், ரஃபேல் விமான முறைகேடு ஊழல்... என ஒன்றிய பாஜக அரசு மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அணி வகுக்கின்றன. புலனாய்வு அமைப்புகளை வளைத்துவிட்டதால் பாஜக ஆட்சியாளர்கள் விசாரணை வளையத்தில் சிக்காமல் தப்பியோடுவது நாட்டுமக்களுக்கு நன்றாக தெரியும். ஊழல் புகார்களில் சிக்கியவர்களை பாஜக வாஷிங் மெஷினில் போட்டு, தூய்மையானவர்கள் என பட்டம் கொடுத்து பதவி கொடுத்து அழகு பார்க்கும் அமித்ஷாவிற்கு ஊழலை பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது?பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்குத் திட்டமில்லை; சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளிக் கொடுத்து விட்டு தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்க மனமில்லை; தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் கீழடி உண்மையை ஏற்கத் திராணி இல்லை; தமிழ்நாட்டு மீனவர்களின் கைதைத் தடுக்க வக்கில்லை; இந்த இலட்சணத்தில் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் எனப் பேசக் கொஞ்சமும் வெட்கமில்லையா அமித்ஷா அவர்களே!
தமிழ்நாடு இன்றைக்கு நாட்டிலேயே பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கிறது என்கிற உண்மை உறுத்தியிருப்பதால் மக்களிடம் தோற்றுப் போன இந்தப் பொய்களை நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார் அமித்ஷா. ஆயிரம் அமாவாசைகள் வந்தாலும் சரி பாஜகவின் நரித்தனம் தமிழ்நாட்டில் ஒருநாளும் வெற்றியடையாது! விடியல் ஆட்சியை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது! தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகப் பாஜகவையும் அதன் பண்ணையடிமையாக மாறிவிட்ட அதிமுகவையும் தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் ஓட ஓட விரட்டக் காத்திருக்கிறார்கள்.