திருவள்ளூரில் காட்டுப் புதரில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பகுதி மக்கள் குழந்தையை மீட்டுக் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சாலையோரத்தில் இருந்த காட்டுப் புதருக்குள் இருந்து 'குவா... குவா...' என குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்த பகுதியில் சென்ற மக்கள் சென்று பார்த்த பொழுது அங்கு பிறந்து சில மணி நேரங்களே ஆன தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மருத்துவத் துறை அதிகாரிகளும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை அங்கிருந்து பத்திரமாக எடுத்துச் சென்றனர். குழந்தையை புதரில் வீசி விட்டுச் சென்றது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.