தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நேற்று (18.08.2025) இரவு உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கூட்டத்தினர் மத்தியில் ஆம்புலன்ஸ் ஒன்று நுழைய முயன்றுள்ளது. அதனை பார்த்த எடப்பாடி பழனிசாமி, `ஆம்புலன்ஸில் ஆள் இருக்காங்களா, இல்லையா? ஒவ்வொரு முறையும் இப்படித்தான் நடக்குது. நிறுத்திப் பாருங்கள். அடுத்த முறை வெறும் ஆம்புலன்ஸ் வண்டி வந்தால், அதனை யார் ஓட்டிக்கிட்டு வருகிறார்களோ, அவரே பேஷண்ட்டாக மாறி ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டிய நிலைமை ஏற்படும்விடும்” எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மருத்தவமனையில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை வழிமறித்து அவமதித்து, அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர்.எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் சங்கத்தின சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி.
அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவிடினும், இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது. இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.