இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (01.12.2025) காலை 11 மணியளவில் தொடங்கியது. அப்போது பூஜ்ஜிய நேரத்தின் போது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவைத் தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கோண்டார். 

Advertisment

அதனைத் தொடர்ந்து அவரை பிரதமர் மோடி மாநிலங்களவையில் வாழ்த்திப் பேசுகையில், “மதிப்பிற்குரிய தலைவரே, குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இது அவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பெருமையான தருணம். உங்களை வரவேற்பது பெருமையான தருணம். சபையின் சார்பாக, நான் உங்களை மனதார வாழ்த்துகிறேன். உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். இந்த அவையில் அமர்ந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும், மேல் சபையின் கண்ணியத்தைப் பேணுவதோடு, உங்கள் கண்ணியத்தையும் எப்போதும் கவனித்துக்கொள்வார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். 

Advertisment

அவர்கள் சபை நாகரிகத்தைப் பேணுவார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நமது தலைவர் (துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்) ஒரு எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் அவர் தனது முழு வாழ்க்கையையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். அரசியல் துறை அதன் ஒரு அம்சமாக இருந்துள்ளது. ஆனால் பிரதானமாக சமூக சேவை இருந்துள்ளது. அவர் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். சமூக சேவையில் ஆர்வமுள்ள நமக்கெல்லாம் அவர் ஒரு உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார்” எனப் பேசினார்

cpr-rajya-sabha-standing

முன்னதாக குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி (21.07.2025) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து  குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த செப்டம்பர் மாதம்09ஆம் தேதி (09.09.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று இந்தியாவின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisment