A poisonous insect entered the school's annual festival rehearsal - a tragedy for a student Photograph: (police)
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள குமாரமங்கலம் பகுதியில் நூற்றாண்டுகளைக் கடந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாதேஸ்வரன்-தனலட்சுமி தம்பதியின் மகள் ரக்ஷிதா என்பவர் மூன்றாம் வகுப்பு பயின்று வந்தார். பள்ளியின் நூறாம் ஆண்டு விழாவை ஒட்டி பள்ளி மாணவர்களின் நடனம், பாடல் என கலை நிகழ்ச்சிகள் கொண்டாட திட்டமிடப்பட்டு அதற்கான ஆண்டு விழா ஒத்திகைகள் நடைபெற்று வந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஒத்திகை நடைபெற்றுக் கொண்டு வந்த பொழுது அதில் பங்கேற்று மாணவி ரக்ஷிதா நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென விசப்பூச்சி ஒன்று அவருடைய நெற்றியில் கடித்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக மாணவி மயக்கமடைந்து கீழே விழுந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் மாணவியை தூக்கிக்கொண்டு திருச்செங்கோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு மாணவி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் மாணவி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் அறிந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பள்ளியின் ஆண்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us