கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த கெப்ரேதொட்டி கிராமத்தைச் சேர்ந்த பாக்யா என்பவர், தளி காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், தனது கணவரான சாமப்பா என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதாவது நவம்பர் 20-ஆம் தேதி முதல் காணவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த போலீசார் “10 நாட்களாக எங்கு போயிருந்தார்? ஏன் இவ்வளவு நாளாக புகார் கொடுக்க வரவில்லை?” என அடுக்கடுக்கான கேள்விகளை பாக்யாவிடம் எழுப்பினர்.
என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென முழித்த பாக்யாவிடம், பெண் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போன் எண்ணை வைத்து யார் யாரிடம் அதிகம் பேசியுள்ளார் என்ற தகவலையும் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், வனக்கனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருடன் அடிக்கடி நீண்ட நேரம் பேசி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரையும் பிடித்து இருவரையும் ஒன்றாக வைத்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/04/sa-2025-12-04-22-00-10.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள கெப்ரேதொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான சாமப்பா. கூலித் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாக்யா (32) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே வனக்கனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பால்ராஜுக்கு சொந்தமான அகலக்கோட்டையில் உள்ள நர்சரி பண்ணையில் வேலை செய்து வந்தனர். அப்போது கூலி மட்டுமின்றி பாக்யாவுக்கு குடும்பச் செலவிற்கு அவ்வப்போது கூடுதலாகப் பணத்தையும் பால்ராஜ் கொடுத்து வந்துள்ளார்.
பின்னர் இவர்களுக்கிடையே திருமணத்துக்கு மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சாமப்பா இல்லாத நேரங்களில் நர்சரி பண்ணையிலேயே பாக்யாவும் பால்ராஜும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். சாமப்பாவும் அதே நர்சரி பண்ணையில் வேலை செய்து வந்ததால் அவர்களது தனிமைக்கு பெரிதும் இடையூறாக இருந்துள்ளார். இதனால் பாக்யாவும் பால்ராஜும் சேர்ந்து சாமப்பாவைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்துள்ளனர். ஆனால் எப்படித் தீர்த்துக்கட்டுவது? இங்கு கொலை செய்தால் தெரிந்துவிடும், அதுவும் நமக்கு அந்தத் தைரியம் இல்லை. அதனால் யாரிடமாவது பணத்தைக் கொடுத்து கொலை செய்ய ஏற்பாடு செய்யலாம் என இருவரும் சேர்ந்து மாஸ்டர் பிளான் போட்டுள்ளனர். அதன்படி மஞ்சகிரி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசனை அழைத்து, “இன்னும் 10 நாட்களில் உனக்குக் கல்யாணமாமே? பணத்திற்கு ரொம்பக் கஷ்டப்படுறேன்னு கேள்விப்பட்டேன். அதனால உனக்கு ஒரு வேலை தரேன், முடிச்சுக் கொடு” என பால்ராஜ் கூறியுள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/04/s-2025-12-04-21-58-55.jpg)
அதற்கு சீனிவாசனும் “என்ன வேலை?” எனக் கேட்க, பால்ராஜ் “சாமப்பா என்பவரைக் கொலை செய்துவிடு, இரண்டரை லட்சம் ரூபாய் தருவேன்” எனப் பேசியுள்ளார். பணக் கஷ்டத்தில் இருந்ததாலும், திருமணத்திற்குச் சில நாட்களே இருந்ததாலும் சீனிவாசன் சரி என ஒப்புக்கொண்டதுடன், “ஆனால் ஒரு கண்டிஷன் – எனது நண்பர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக்கொள்வேன்” எனக் கூறியுள்ளார். பால்ராஜும் “நீ யாரையாவது சேர்த்துகா” எனக் கூறி இரண்டரை லட்சம் ரூபாயைப் பணமாகக் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய மஞ்சகிரி சீனிவாசன், தனது நண்பரான கெப்ரேதொட்டி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சீனிவாசனை அழைத்து, இரண்டரை லட்சத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயைத் தந்துவிட்டு நடந்தவற்றைக் கூறியுள்ளார். பின்னர் இருவரும் மது அருந்திவிட்டு எப்படிக் கொலை செய்வது, எங்கு கொலை செய்வது என யோசித்துக்கொண்டிருந்தபோது மஞ்சகிரி சீனிவாசன், “நாம சாமப்பாவைக் கொலை செய்ய வேண்டாம். கொலை செய்தால் எப்படியும் மாட்டிக்கொள்வோம். அதுமட்டுமில்லாமல் எனக்குக் கல்யாணம் வேறு இருக்கு. இந்தச் சமயத்தில் ஏதாவது நடந்தால் ரொம்பக் கேவலமாகிவிடும். அதனால் சாமப்பாவை அழைத்துக்கொண்டு கர்நாடக மாநிலத்தில் எங்காவது 3 மாதம் விட்டுவிடலாம். அதன்பிறகு வந்தாலும் பிரச்சினை இருக்காது, பணமும் திரும்பக் கேட்க முடியாது” எனப் பேசி முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நவம்பர் 20-ஆம் தேதி கெப்ரேதொட்டியில் இருந்து சாமப்பாவும் அதே பகுதியைச் சேர்ந்த நாகமணியும் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தனர். அவர்களை இருவரையும் அழைத்த இரு சீனிவாசன்களும் “எனக்குத் தெரிந்த இடத்தில் வேலை உள்ளது, கூலி அதிகமாக வாங்கித் தருவேன், வா போகலாம்” என அழைத்துள்ளனர். ஆனால் நாகமணி வருவதில்லை எனக் கூறியுள்ளார். அதற்கு நாகமணிக்கு மட்டும் ஒரு பீர் வாங்கிக் கொடுத்து காரிலேயே அழைத்துச் சென்று கெப்ரேதொட்டி கிராமத்தில் இறக்கிவிட்டுள்ளனர். பின்னர் சாமப்பாவைத் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெண்ணாங்கூர் பகுதியில் உள்ள நர்சரி ஒன்றில் வேலைக்குச் சேர்த்துள்ளனர். அங்கேயே சாமப்பா வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில் சாமப்பாவின் உறவினர்கள் பாக்யாவிடம் சென்று “எங்கு சாமப்பா?” எனக் கேட்டுள்ளனர். பாக்யாவும் வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி நாட்களைக் கடத்தி வந்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/04/p-2025-12-04-22-01-06.jpg)
பின்னர் 10 நாட்களாகியும் அவரைக் காணாததால் உறவினர்களுக்கு பதில் சொல்ல முடியாமல், உறவினர்களின் ஆலோசனைப்படி தளி காவல் நிலையத்தில் பாக்யா புகார் அளித்தார். இந்தப் புகார் அளித்தது குறித்துத் தகவல் தெரிந்த இரு சீனிவாசன்களும் பெண்ணாங்கூர் பகுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சாமப்பாவை கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த தாவரைக்கரே என்ற பகுதியில் உள்ள நர்சரி பண்ணைக்கு அழைத்துச் சென்று அங்கு வேலைக்குச் சேர்த்ததாகவும், பின்னர் அனைத்து நாடகமும் அம்பலமானதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கர்நாடக மாநிலத்திற்குச் சென்று அங்கிருந்த சாமப்பாவை மீட்டதுடன், பாக்யா, பால்ராஜ், மஞ்சகிரி சீனிவாசன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு சீனிவாசனை போலீசார் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/04/h-2025-12-04-21-56-53.jpg)