ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்புதூர் என்ற இடத்தில் பாலம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் திருப்பூரைச் சேர்ந்த யோகநாதன் என்ற இளைஞர் அவருடைய தங்கை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரிப்பதற்காக நேற்று (05.11.2025) இரவு பெருந்துறைக்குச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்புவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்புதூர் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சாலையில் பாலம் கட்டுவதற்காகப் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அந்த பள்ளத்தைச் சுற்றிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்தவித படுப்புகளோ, எச்சரிக்கை பதாகைகள் என எதுவும் வைக்கப்படவில்லை. இதன் காரணமாக இருள் சூழ்ந்த சமயத்தில் யோகநாதன் அவ்வழியாகச் சென்றபோது பள்ளத்தில் நிலை தடுமாறி அவரது இரு சக்கர வாகனத்துடன் விழுந்துள்ளார்.
இதனால் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே சமயம் யோகநாதன் பள்ளத்தில் விழுவதைக் கண்ட அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து பெருந்துறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இளைஞர் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us