தெருநாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது நஸ்ருதீன் (வயது 50). கடந்த ஜூலை மாதம் பெசன்ட் சாலையில் உள்ள மீரா சாஹித் மார்க்கெட் பகுதியில் இருந்த தெருநாய் ஒன்று இவரது முழங்காலின் பின்பகுதியில் கடித்துள்ளது. இதனையடுத்து முகமது நஸ்ருதீன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இத்தகைய சூழலில் தான் கடந்த 12ஆம் தேதி முகமது நஸ்ருதீனுக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். 

Advertisment

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு உடனடியாக அவரை தனி அறையில் வைத்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் முகமது நஸ்ருதீன் சிகிச்சை பலனின்றி நேற்று (13.09.2025) பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.